இந்த அழகான உலகில்
ஆண்டவர் நம்மைச் சுற்றி நிறைய அற்புதமான, அர்த்தமுள்ள உறவுகளை ஏற்படுத்தியுள்ளார்.
எல்லா உறவுகளிலும் ஒருவருக்கொருவர் இடையே உள்ள தொடர்பு மிகவும் அவசியமாக உள்ளது.
தொடர்புச் சத்தங்கள்,
செயல்கள், இசை, எழுத்துக்கள், அடையாளங்கள், சின்னங்கள் மூலமாக வெளிபடுகிறது.
கடவுள் எல்லா மனிதரையும் தம்மோடு தொடர்பு கொள்ளவும், ஒருவரோடு ஒருவர் தொடர்பு
கொள்ளவுமே தமது சாயலாக உருவாக்கினார். அமைதி வேளை கடுவுளோடு கூட நேரம் செலவிட்டு
அவரோடு அர்த்தமுள்ள தொடர்பை ஏற்படுத்த உதவுகிறது.
அறிமுகவுரை:
அமைதி வேளை என்பது கடவுளோடு செலவிடப்படும்
தனிப்பட்ட நேரம் அல்லது நியமனம். அமைதி வேளையின் பொழுது நாம் துதிபாடல்கள்
பாடலாம், ஜெபிக்கலாம், வேதாகமம் அல்லது அனுதின தியானத்தை வாசிக்கலாம், தேவனுடைய
வார்த்தையை தியானிக்கலாம், அல்லது அமைதியாக தேவனை நோக்கி பார்த்து சிந்திக்கலாம்.
அமைதி வேளை என்பது தேவன் நாம் கீழ்ப்படியும்படி/பின்பற்றும்படி கூறுவதை கேட்பதும்,
நாம் அவரோடு பேசுவதும் ஆகும்.
அமைதி வேளையின் அவசியம்:
நாமெல்லோரும் வெவ்வேறு சூழ்நிலைகளில்
பிறந்து, வளர்ந்துள்ளோம். நாம் தனித்துவமிக்கவர்களாக வெவ்வேறு விருப்பங்களும்
ஆர்வங்களும் உள்ளவர்களாக இருப்பதற்கு நமது குடும்ப பின்னணி, நிதி பின்னணி, சமூக
பின்னணி, கலாச்சார பின்னணி, கல்வி பின்னணி போன்றவை காரணங்களாக உள்ளன. நம்முடைய பின்னணிகளின் விளைவுகளால் நம் ஒவ்வொருவருக்குள்ளும் நிறைய
முன்குறித்த கருத்துக்கள் ஏற்பட்டுள்ளன. அவை எல்லா நேரங்களிலும் யதார்த்தமாகவும், மன நிறைவாகவும்
இருப்பதில்லை. எல்லா விளைவுகளையும், வேறுபாடுகளையும் உடைத்தெரிவதற்கு, நம்
அனைவருக்கும், நம்மை படைத்த கடவுள் ஒருவரே தரக்கூடிய தரமான பொதுவான மதிப்பீடுகள்
தேவை. ஒரு இயந்திரம் இயங்குவதை அதன் வடிவமைப்பாளர் நிர்ணயிப்பது போல. குழப்பங்கள்
இல்லாமலும், பாரபட்சம் இல்லாமலும் ஒழுங்கான வாழக்கை வாழ்வதற்கு, கடுவுள் நாம்
எப்படி வாழ வேண்டும் என நினைக்கிறார் என்பதை அறிவது மிகவும் அவசியமாகும். நாம்
தேவனுடைய வார்த்தையின்படி வாழும் பொழுதுதான் தடைகளிலும் துன்பமான சூழலிலும் கூட சந்தோஷமான, சமாதானமான, திருப்தியான வாழ்வை
வாழ முடியும். நாம் தேவனுடைய மேன்மையையும், இறையாண்மையையும் நினைவுக்கூர்ந்து
ஜெபித்து, போற்றி அவரை சார்ந்திருப்பதே இந்த உலகில் உள்ள சூழ்நிலைகள்
எல்லாவற்றையும் சமாளிப்பதற்கும், முறியடிப்பதற்கும் சிறந்த வழியாகும். எல்லா பிரச்சனைகளுக்கான
தீர்வுகளும், நாம் உருவாக காரணமானவர் இடத்திலிருந்துதான் கிடைக்கிறது. நாம்
தேவனுடைய வார்த்தையை கேட்டு நடப்பதும், அவரிடம் பேசுவதும் உலகில் உள்ள அனைத்திலும்
நன்மை தீமையைப் பகுத்தறிந்து அதை அனுபவிக்க உதவுகிறது,
அது மாத்திரம் இல்லாமல் நம் வாழ்வில் தேவனுடைய நோக்கத்தை உணர்ந்து, வாழ்வில் நம்மை
சுற்றியுள்ள அணைத்து காரியங்களையும் சமப்படுத்த உதவுகிறது.
தேவனுடைய வார்த்தையை கேட்பது:
தேவனுடைய வார்த்தையை கேட்பது என்பது
விசித்திரமாக இருக்ககூடாது, அது தேவனுடைய வார்த்தையை படித்து, உணர்ந்து, அதில்
கூறப்பட்டுள்ள கருத்துக்களை பின்பற்றுவதே ஆகும். கடுவுள் நம்மோடு சத்தங்கள்,
அடையாளங்கள், சின்னங்கள், சிந்தனைகள், சூழ்நிலைகள் ஆகியவற்றின் மூலம் பேசக்கூடும்,
இருப்பினும் நாம் அதை வேதாகமத்தோடு ஒப்பிட்டு சரிபார்க்க வேண்டும். தேவன் ஒரு
போதும் மாறாதவர், அவர் வேதாகமத்தின் சூழ்நிலையையும், போதனையையும் ஒரு போதும்
முரண்படுத்துவதில்லை. நாம் தேவனுடைய வார்த்தையை கேட்கும் சிறந்த வழி வேதாகமம்
மற்றும் அதின் மதிப்பீடுகள் மூலமாகும். தேவனுடைய வார்த்தையை கேட்பது தேவனை பற்றி
அறிவதற்கும், நம்மை பற்றி நாமே அறிவதற்கும், நாம் எப்படி இருக்க வேண்டும் என
தெரிந்துக்கொள்வதற்கும், நாம் என்ன செய்ய வேண்டும் என தெரிந்துக்கொள்வதற்கும் நமக்கு உதவுகிறது. நம் ஒவ்வொருவருடைய சூழ்நிலைக்கேற்ப
தேவனுடைய வார்த்தை நமக்கு ஏற்றதாய் இருக்கிறது, நாம் தேவனுடைய வார்த்தையை கேட்பதை
அச்சமயங்களில் அனுபவபூர்வமாக தெரிந்து கொள்ள முடியும். நாம் தேவனுடைய வார்த்தையை
சரியாக கேட்டால் தான், அவரிடத்தில் சரியாக பேச முடியும்.
நாம் வேதாகமத்தின் ஒரு பகுதியை/அதிகாரத்தை/புஸ்தகத்தை
படித்து தியானிப்பதற்கும், அதில் கூறப்பட்டுள்ள காரியங்களில் சில முக்கியமானவற்றை
சிந்திப்பதற்கும் ASPECT என்ற ஒரு எளிய முறையை பயன்படுத்தலாம்.
A- குறிப்பது
“கடுவுளை பற்றி” (“ABOUT GOD”)
S- குறிப்பது
“விடவேண்டிய பாவங்கள்” (“SINS TO AVOID”)
P- குறிப்பது
“பற்றிக்கொள்ள வேண்டிய சத்தியங்கள் (வாக்குதத்தங்கள்)” (“PROMISES TO CLAIM”)
E- குறிப்பது
“பின்பற்ற வேண்டிய உதாரணங்கள் மற்றும் பின்பற்ற கூடாத உதாரணங்கள்” (“EXAMPLES TO FOLLOW & EXAMPLES NOT TO FOLLOW”)
C- குறிப்பது “கீழ்படிய
வேண்டிய கட்டளைகள்” (“COMMANDS TO OBEY”)
T- குறிப்பது “கருப்பொருள்”
(“THEME”)
நாம் ஒரு பகுதி/அதிகாரம்/புஸ்தகத்திலுள்ள கடவுளை
பற்றிய வார்த்தைகளை கவனித்தால், ஜெபிக்கும் பொழுது அவரை துதிக்கவும், போற்றவும்
முடியும். விடவேண்டிய பாவங்களை கவனிக்கும் பொழுது, நாம் நம்மிடத்தில் சரி செய்து
கொள்ள வேண்டியவற்றை தெரிந்து கொண்டு, கடவுளின் உதவியோடு அதை முறியடிக்கலாம். நாம்
பற்றிக்கொள்ள வேண்டிய சத்தியங்களை கவனிப்பதன் மூலம், வேதாகமத்தில் தேவன் கூறிய
வார்த்தைகளை உரிமை பாராட்ட முடியும். நாம் பின்பற்ற வேண்டிய உதாரணங்கள், பின்பற்ற
கூடாத உதாரணங்களை கவனிப்பதன் மூலம், மனிதர்களின் குணங்களை உணர்ந்து, நமக்காகவும்,
நம்மை சுற்றியுள்ள மக்களுக்காகவும் நன்றி/முறையிடுதல் செய்யமுடியும். நாம்
கீழ்படிய வேண்டிய கட்டளைகளை கவனிப்பதன் மூலம் தேவன் கொடுத்த கட்டளைகளை அவருடைய
வலிமையினாலும், வழிநடுத்துதலாலும் பின்பற்ற முடியும். நாம் ஒரு பகுதி/ அதிகாரம்/
புத்தகத்திலுள்ள கருப்பொருளை கவனிப்பதன் மூலம், நாம்
கற்றுக்கொண்ட சில முக்கியமான காரியங்களை நினைவில் கொள்ள முடியும்.
தேவனிடம் பேசுவது:
தேவனிடம் பேசுவதற்கு அசாதாரமான முயற்சி தேவையில்லை,
நம்முடைய நெருங்கிய நண்பரிடமோ அல்லது தந்தையிடமோ அன்போடும், மரியாதையோடும் பேசுவது
போன்று பேசலாம். நாம் பாடல்கள், எழுத்துக்கள், பிரதிபலிப்பு, ஜெபம் ஆகியவற்றின்
மூலம் தேவனோடு பேச முடியும். ஜெபத்தில் நாம் தேவனோடு நம்முடைய சொந்த வார்த்தைகளால்
பேசுகிறோம். நாம் நிறைய நேரங்களில் கடுவுள் அன்பானவர், பராமரிப்பவர் என்பதை
மாத்திரம் நினைவில் வைத்து, நம்முடைய தேவைகளையும், குறைவுகளையும்
மாத்திரம் தேவனிடம் கூறுகிறோம். நிறைய நேரங்களில் தேவன் எல்லாம் வல்லவர், எல்லாம்
அறிந்தவர், எங்கும் நிறைந்தவர் என்பதை நினைவுக்கூர்ந்து அவரை போற்றுவதில்லை. நிறைய
நேரங்களில் அவர் நம்முடைய தேவைகளை தருவதில் உண்மையுள்ளவர் என்பதை
நினைவுக்கூர்ந்து, அவருக்கு நன்றி சொல்லுவதில்லை. மற்றும் நிறைய நேரங்களில் தேவன்
நீதியுள்ளவர், மன்னிப்பவர், இரக்கமுள்ளவர் என்பதை நினைவுக்கூர்ந்து, குற்றங்களை
ஒப்புக்கொள்ளுவதும் இல்லை.
நாம் ஜெபத்தின் மூலம் கடவுளோடு
பேசுவதற்கும், சில முக்கியமானவற்றை மறக்காமல் இருப்பதற்கும் ACTS என்ற எளிய
முறையை பயன்படுத்துகிறோம்
A- குறிப்பது
“துதித்தல்” (“ADORATION”)
C- குறிப்பது
“பாவங்களை ஒப்புக்கொள்ளுதல்” (“CONFESSION”)
T- குறிப்பது
“நன்றி செலுத்துதல்” (“THANKSGIVING”)
S- குறிப்பது
“வேண்டுதல்” (“SUPPLICATION”)
நாம் தேவனுடைய வார்த்தையில் ASPECT முறைமையின் படி
கற்றுக்கொண்ட காரியங்களை அவரிடம் பேசும் பொழுது பயன்படுத்தலாம். நாம் கடுவுளை
பற்றி கற்றுக்கொண்டதை வைத்து அவரை போற்றலாம். நாம் தனிப்பட்டவர்களாகவும், ஒரு
சமூகமாகவும் செய்த குற்றங்களை ஒப்புக்கொள்ளலாம், நாம் தேவனுடைய வாக்குதத்தங்களுக்காகவும் வேதாகமத்தில் உள்ள உதாரணங்களுக்காகவும் தேவனின் கட்டளைகளுக்காகவும் நன்றி
சொல்லலாம், நாம் நம்முடைய தேவைகளுக்காகவும், நம்முடைய குறைகளை முறியடிப்பதற்கும்
வேண்டுதல் செய்யலாம்.
முடிவுரை:
ஒவ்வொரு மனிதனும் அவன் வாழ்வின் நோக்கங்களை
அறிந்துக்கொள்ள அமைதி வேளை மிகவும் அவசியமாகும். எல்லா உறவுகளும் உயிரோட்டத்துடன்
இருப்பதற்கு ஒழுங்கும், வழக்கமும் தேவைப்படுவது போல அமைதி வேளைக்கும் இவை
தேவையாகும். சிலர் அதிகாலையில் தேவனோடு கூட நேரம் செலவளிப்பர், சிலர் தூங்கி
எழுந்தவுடன் நேரம் செலவளிப்பர், சிலர் மாலையிலும், சிலர் இரவிலும் என தங்களுடைய
நிலைமை, வசதிக்கேற்ப கடவுளோடு நேரம் செலவளிப்பர். குறித்த நேரம் மிகவும்
அவசியமானதன்று, ஆனால் தேவனுடைய வார்த்தையை கேட்பதும், அதின்படி நடப்பதும், அவரோடு
பேசுவதுமே அவருடைய சித்தத்தின்படி நடக்க உதவும். தேவனோடு அதிகாலையில் நேரம் செலவளிப்பது சிறந்த அறிவுறுத்தல், ஏனெனில் அது சிறந்த அமைதியான நேரம், நம்
சிந்தனைகளும் புதியதாக இருக்கும். மேலும் அதிகாலையில் செய்வது முதற்காரியம், ஆகையால் அதிக கவனமும் செலுத்த முடியும். தேவனுடைய
வார்த்தையை கேட்பதும், அவரிடம் பேசுவதும் சமமாக முக்கியம், அவை இரண்டும் ஒன்றை
ஒன்று நிறைவு செய்து, நமது விசுவாசத்தை நிலைப்பெற செய்கிறது. அவை
ஒரு மனிதனை முழுவதும் செயலாற்ற கூடியவனாக மாற்றுகிறது.
“தேவன் படைத்ததெல்லாம் நல்லதாயிருக்கிறது.
ஸ்தோத்திரத்தோடே ஏற்றுக்கொள்ளப்படுமாகில் ஒன்றும் தள்ளபடத்தக்கதல்ல. அது
தேவவசனத்தாலும் ஜெபத்தினாலும் பரிசுத்தமாக்கப்படும்.” – 1
தீமோத்தேயு 4:4,5