Saturday, 9 May 2020

நோக்கமுள்ள வாழ்க்கை

நோக்கமுள்ள வாழ்க்கை:

அறிமுகம்:
எல்லா மனிதரும் தம்முடைய வாழ்வின் நோக்கத்தை விவரிப்பது இவ்வுலகில் மதிப்பீடுள்ள திருப்தியான வாழ்வை வாழ்வதற்கு அவசியமாகும். இளவரசரானாலும் ஏழையானாலும் இவ்வுலகில் பிறந்த அனைவரும் இயற்கையின் முடிவைச் சந்தித்தாக வேண்டும். ஒரு நபர் கடவுளை நம்பவில்லை எனில், அந்த நபர் தம் வாழ்வின் நோக்கத்தை முடிவுள்ள நோக்கில் மாத்திரம் அமைப்பர், நித்திய நோக்கில் அல்ல, தம்முடைய உணர்வுகளையும் சிந்தனைகளையும் உடல் சார்ந்த காரியங்களையும் திருப்திப்படுத்த எண்ணுவர், ஆனால் அதற்கு அளவீடு ஒன்றும் இல்லாததால், கடவுளைத் தவிர்த்து அவர்கள் தோல்வி அடைவர். கடுவுள் மேலுள்ள ஒரு நபரின் நம்பிக்கை வாழ்வின் நோக்கத்தை விவரிக்க முக்கிய பங்கு வகிக்கிறது. சரியான கடவுளை நம்புபவர் மாத்திரமே சரியாய் வாழ்வின் நோக்கத்தை அமைக்க முடியும்.

கடவுள்- எல்லாவற்றிற்கும் மூலக்காரணர்
எல்லாவற்றும் பிதாவாகிய தேவனிடத்தில் இருந்துள்ளது மற்றும் நாம் அவருக்காக உள்ளோம். எல்லாவற்றும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வழியாக உள்ளது மற்றும் அவர் வழியாக நிலைத்திருக்கிறோம் (1கொரி 8: 6).
ஆதியிலே தேவன் அவருடைய வார்த்தையினால் வெறுமையிலிருந்து வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார். கடவுள் ஒளி, இருட்டு, ஆகாயவிரிவு, நிலம், நீர்நிலை, செடிகொடி, சூரியன், நிலா, நட்சத்திரம், பறவைகள், நீர் வாழ் உயிரினம், மிருகங்கள், மனுஷன்/ மனுஷி ஆகியவற்றை படைத்தார் (ஆதி 1: 1-27). கடவுள் எல்லாவற்றையும் ஒரு நோக்கத்திற்காகப் படைத்தார், மற்றும் அவர் ஒரு நித்திய திட்டத்தை அதற்கு பின்னால் வைத்திருந்தார்.

கடவுள் படைத்த அனைத்தும் நல்லது:
கடவுள் தாம் படைத்த அனைத்தையும் நல்லதெனக் கண்டார் (ஆதி 1: 1-30)
தேவன் படைத்ததெல்லாம் நல்லதாயிருக்கிறது; ஸ்தோத்திரத்தோடே ஏற்றுக்கொள்ளப்படுமாகில் ஒன்றும் தள்ளப்படத்தக்கதல்ல. அது தேவவசனத்தினாலும் ஜெபத்தினாலும் பரிசுத்தமாக்கப்படும் (1 தீமோத் 4: 4, 5).

மனிதன்- கடவுளின் விசேஷித்த படைப்பு
தேவன் தம்முடைய சாயலாக மனுஷனை சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார் (ஆதி 1: 27).
தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான் (ஆதி 2: 7)
தேவனாகிய கர்த்தர் அனைத்து உயிரினங்களையும் மனிதனிடத்தில் கொண்டு வந்தார், மனிதன் அதை எவ்வாறு அழைத்தானோ அதுவே அதற்குப் பெயராயிற்று. தேவனாகிய கர்த்தர் பெண்ணை ஆணினுடைய விலா எலும்பிலிருந்து உண்டாக்கினார் (ஆதி 2: 18- 24).
பிரமாண்டமான உலகை பார்க்கும்பொழுது மனிதனை பற்றிக் கடுவுள் நினைப்பதற்கு அவன் எம்மாத்திரம், எனினும் அவனைத் தேவதூதர்களைவிடச் சிறிதே குறைவுள்ளவர்களாக உருவாக்கினார், அவர்களுக்கு மகிமையின் சிங்காசனத்தையும் கனத்தையும் தந்து; அவரின் கைகளின் கிரியைகளுக்கான அரசாட்சியை தந்து; ஆடு, மாடு, மிருகங்கள், பறவைகள், கடல் வாழ் உயினங்களை கீழ்படுத்தினார் (சங்கீதம் 8: 3-8).

மனிதனை குறித்து கடவுளின் நோக்கம்:
பின்பு தேவன் அவர்களை நோக்கி: நீங்கள் பலுகி பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்து பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துக்களையும் ஆண்டுக்கொள்ளுங்கள் என்று சொல்லி, தேவன் அவர்களை ஆசீர்வதித்தார் (ஆதி 1: 28).
தேவனாகிய கர்த்தர் மனுஷனை ஏதேன் தோட்டத்தில் அழைத்துக்கொண்டு வந்து, அதைப் பண்படுத்தவும் காக்கவும் வைத்தார் (ஆதி 2: 15).
எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், தேவன் சித்தமுள்ளவராயிருக்கிறார் (1தீமோத் 2: 4). அதிக பயத்தோடும் நடுக்கத்தோடும் உங்கள் இரட்சிப்பு நிறைவேறப் பிரயாசப்படுங்கள். ஏனெனில் தேவனே தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும் உங்களில் உண்டாக்குகிறவராயிருக்கிறார் (பிலிப்பி 2: 12, 13).

உலகின் வழி விலகலும் சரிவும்:
மனுஷனுடைய இருதயத்தின் நினைவுகள் அவன் சிறுவயது தொடங்கி பொல்லாததாயிருக்கிறது என்று கர்த்தர் தம் இருதயத்தில் சொன்னார் (ஆதி 8: 20, 21).
மனிதனுடைய விலகல் கடுவுளுடைய நன்மையான படைப்பைச் சரிவடைய செய்தது, கடுவுளுடைய படைப்பின் சாராம்சம் இன்னும் மனிதனுள் மறைந்து உள்ளது, ஏனெனில் கடவுள் மனிதனுடைய அனைத்து தேர்விற்கும் விளைவுகள் தந்துள்ளார்.
கடவுள் மனிதன் பின்பற்ற வேண்டிய முதல் கட்டளையாக அவன் சில காரியங்களைச் செய்யலாம் எனவும் செய்யக் கூடாது எனவும் கூறினார் (ஆதி 2: 16, 17). ஆனால் மனிதன் செய்யக் கூடாததை செய்தான், கீழ்ப்படியாமையின் விளைவாக அவனால் கடவுளைச் சந்திக்க முடியவில்லை, எனினும் கடவுள் அவனோடு இடைப்பட்டு அவனுடைய தவறை கடிந்துரைத்தார் (ஆதி 3அதி).
பவுல் ரோமருக்கு இப்படியாக எழுதுகிறார், “யாரெல்லாம் தீமையான காரியங்களைப் பின்பற்றுகிறார்களோ அவர்கள் மரணத்திற்கு உரியவர்கள் என்ற கடவுளுடைய நீதியுள்ள நியமங்களை மக்கள் அறிந்திருக்கின்றனர். அவர்கள் அதைச் செய்வது மாத்திரம் இல்லாமல், அதற்கு அனுமதியும் அளிக்கிறார்கள்” (ரோமர் 1: 18- 32).

மனிதனுடைய தேடலும் தோல்விகளும்:
நிழலைப் போன்ற மாயையான தன் ஜீவகாலத்தைப் போக்கும் மனுஷனுக்கு இந்த ஜீவனில் நன்மை இன்னதென்று அறிந்தவன் யார்? தனக்குப் பின்பு சூரியனுக்குக் கீழே சம்பவிக்குங்காரியம் இன்னதென்று மனுஷனுக்கு அறிவிப்பவன் யார்?” (பிரசங்கி 6: 12)
மனிதன் பலவீனனை ஒடுக்குவதால் தன்னை பலவானாகக் காண்பிக்க எண்ணினான், மேலோகத்தை அடைய முயற்சித்து உயர்ந்தவனாகக் காண்பிக்க எண்ணினான், தனக்கு சொரூபங்களாலான கடுவுளை உண்டாக்கி தன்னை படைப்பாற்றல் உள்ளவனாகக் காண்பிக்க எண்ணினான், செல்வத்தையும் பொருளையும் பெருக்கி பணக்காரனாகக் காண்பிக்க எண்ணினான், இயற்கைக்கு மாறான/ நியாயபிரமானத்திற்கு விரோதமான ஆசைகளைக் கொண்டு திருப்தி அடைய எண்ணினான், ஆனால் அவை அனைத்திலும் தோல்வியே மிஞ்சியது ஏனெனில் அதில் கடவுளுடைய மதிப்பீடுகள் இல்லை. ஒரு நபர் தன் வாழ்வில் கடுவுள் இல்லாமல் நிறைய நன்மைகள் செய்தாலும் இறுதியில் அது திருப்தியானதாகவும், அர்த்தமுள்ளதாகவும் இருக்காது.
நிறைய இன்பங்களையும், நிலைகளையும், வெளிப்பாடுகளையும் அடைந்த ஒரு ராஜா, “மாயை, மாயை, எல்லாம் மாயை என்று பிரசங்கி சொல்லுகிறான்.சூரியனுக்குக் கீழே மனுஷன் படுகிற எல்லாப் பிரயாசத்தினாலும் அவனுக்குப் பலன் என்ன?” எனக் கூறுகிறார் (பிரசங்கி 1: 2, 3).

கிறிஸ்து- அனைத்திற்குமான வழிப்பாதை
தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார் (யோவான் 3: 16).
மனிதனுடைய தேடுதலும் தோல்விகளும் அவனுடைய பாவத்தினாலும், கடவுள் படைத்த பெரிய நோக்கத்திலிருந்து விலகியதாலும் நிகழ்ந்தது, அது நம்பிக்கையின்மையையும் உண்டாக்கியது, வாழ்வை மதிப்பிழந்ததாக ஆக்கியது. ஆனால் கிறிஸ்து பல காலங்களாக ஒரு விடுதலையின் நம்பிக்கையாகப் பிரசங்கிக்கப்பட்டுள்ளார், அவரே கோணலான வழிகளை நேராக்கவும் கூடும்.
கிறிஸ்துவின் வார்த்தையை இருதயத்தில் வைத்துக்கொள்வதாலும், அவர் நடந்த அதே வழியில் நடப்பதாலும் கடவுளுடைய அன்பு நம்மில் பூரணமாக்கப்படும்.
இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை நமக்குக் குற்ற உணர்வு இல்லாத மதிப்புள்ள சிறப்பான வாழ்வை அளித்தது. மற்றும் எல்லா விசுவாசிகளும் தங்களுடைய வாழ்வில்  தங்கள் சகோதரருக்காக உயிரையும் கொடுத்து, கிறிஸ்துவின் வாழ்வை பிரதிபலிக்க வேண்டும், அதுவே இவ்வுலகில் அவர்களின் உயரிய நோக்கமாகும் (1 யோவான் 3: 16).

நம்முடைய வாழ்வை கர்த்தருக்குள் வடிவமைத்தல்:
அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய் தேவனிடத்தில் அன்புகூறுகிறவர்களுக்கு சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம் (ரோமர் 8: 28)
இயேசு கிறிஸ்து அளித்த பெரிய கட்டளை “உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூறுவாயாக; இது முதலாம் பிரதான கற்பனை. இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால், உன்னிடத்தில் நீ அன்புகூறுவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூறுவாயாக என்பதே. இவ்விரண்டு கற்பனைகளிலும் நியாயப்பிரமாணம் முழுமையும் தீர்க்கதரிசனங்களும் அடங்கியிருக்கிறது என்றார் (மத்தேயு 22: 36- 40).”
வாழ்வில் உள்ள சூழ்நிலைகளுக்குச் சிறந்த மதிப்பளவுகள், உருவாக்கியவராக உள்ளவரிம் இருந்து கிடைக்கப்பட்ட தேவனுடைய வார்த்தையின் மூலமே தேடவும் பெறவும் முடியும்.
ஒரு இயந்திரத்தின் செயலையும் நோக்கத்தையும் எவ்வாறு உருவாக்கியவரின் விளக்கப் புஸ்தகம் சிறந்த வகையில் விவரிக்க முடியுமோ, அதே போல் தேவனுடைய வார்த்தையாகிய வேதாகமம் மனிதர்களுக்கான நோக்கத்தை விவரிக்க முடியும்.
நாம் ஏற்றுக்கொள்ளும் அல்லது ஏற்றுக்கொள்ளாத அனைத்திற்கும் விளைவுகளை நாம் சந்திக்கிறோம், முதலில் அதைக் காண முடிகிறதான இந்த உலகில், பிறகு வெளிப்பட போகிற வருங்காலத்தில்.
எல்லா செல்வங்களையும், இன்பங்களையும், வெளிப்பாடுகளையும் அனுபவித்த ஒரு மனிதன் (சாலமோன் ராஜாவாகக் கருதப்படுபவர்), “தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே” எனக் கூறுகிறார் (பிரசங்கி 12: 13).
பவுல் ரோமருக்கு இப்படியாக எழுதுகிறார், “கர்த்தர் சமீபமாய் இருப்பதால் நாம் ஒன்றிற்கும் கவலைக்கொள்ளாமல், சந்தோஷமாய் இருக்கலாம். எல்லா புரிந்துக்கொள்ளுதலுக்கும் மேலான தேவ சமாதானம் கிறிஸ்து ஏசுவுக்குள் இருதயங்களையும் சிந்தையையும் காக்கும். நாம் சத்தியமுள்ள, கனத்திற்குரிய, நீதியுள்ள, சுத்தமுள்ள, நேசிக்கதக்க, சிறப்பு தன்மையுள்ள, துதிக்க தகுதியுள்ள காரியங்களைச் சிந்தித்துக்கொண்டிருக்கலாம்” (ரோமர் 4: 4-9).

சுயத்தின் மாற்றமும் உலகத்தின் தாக்கமும்
கோதுமை மணியானது நிலத்தில் விழுந்து சாகாவிட்டால் தனித்திருக்கும், செத்ததேயாகில் மிகுந்த பலனைக் கொடுக்கும். (யோவான் 12: 24).
ஒளியில் நடப்பது நாம் உண்மையுள்ளவர்களாக இருக்க, ஒருவரோடு ஒருவர் ஐக்கியத்துடன் இருக்க மற்றும் பாவங்களிலிருந்து சுத்திகரிக்கப்பட உதவும். பாவங்களை அறிக்கையிடுவது அதிலிருந்து மன்னிப்பு பெற, எல்லா அநீதியிலிருந்தும் சுத்திகரிக்கப்பட உதவும் (1 யோவான் 1:6-10)
ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின (2கொரி 5: 17). ஒருவன் இயேசுவை பின்பற்றி வர விரும்பினால், அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு இயேசுவை பின்பற்றக்கடவன் (மத்தேயு 16: 24).
கடவுளை நம்புகிறவர்கள் தங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்க வேண்டும், இதுவே புத்தியுள்ள ஆராதனை. இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாக வேண்டும் (ரோமர் 12: 1, 2).
கடுவுளுக்கு அடுத்ததாக, நம்மை நாம் மாத்திரமே அதிகமாய் அறிந்திருக்கிறோம். நாம் கிறிஸ்துவை ரட்சகராக ஏற்றிருக்கிறோம், நாம் சபைக்குப் போகலாம், ஐக்கியத்திலும் பங்குபெறலாம், எனினும் நம் வாழ்க்கை வழி, நடக்கை, செயல்கள் நம்முடைய சிநேகிதர் முன்னால் மதிப்பீடு இல்லாமல் இருந்தால் அது எவ்வாறு உபயோகமாக இருக்கும். நாம் எவ்வாறு மற்றவரைக் கவனிக்கின்றோமோ நோக்குகின்றோமோ, அதே போல எல்லோரும் நம்முடைய வாழ்வை நெருங்கிக் கவனிக்கிறார்கள் என்பது மிகவும் உண்மை. நாம் எப்பொழுதும் சுவிசேஷத்தை வார்த்தையில் பகிர வேண்டும் என்று அவசியமில்லை, நம்முடைய செயல்கள் இன்னும் அதிகமாய் பேசும்.
ஒருவன் தன் சிநேகிதருக்காகத் தன் ஜீவனை கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை (யோவான் 15: 13)
நற்கிரியைகளை செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாயிருக்கிறோம்; அவைகளில் நாம் நடக்கும்படி அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம்பண்ணியிருக்கிறார் (எபேசியர் 2: 10).

விசுவாசிப்பவர்கள்- உலகத்திற்கு உப்பும் ஒளியும்:
இயேசு கிறிஸ்து விசுவாசிகளே சுவையளிக்கும் உப்பு எனவும் பாதை காண்பிக்கும் ஒளி எனவும் கூறினார். விசுவாசிகளின் ஒளி மற்றவர் முன்பு பிரகாசிக்க வேண்டும், அதன் மூலம், மனுஷர் விசுவாசிகளின் நற்கிரியைகளைக்கண்டு, பரலோகத்திலிருக்கிற பிதாவை மகிமைப்படுத்தும்படி, வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது.
உலகில் உள்ள அனைத்து மக்களுக்கும் வாழ்வில் சரியான மதிப்பீடுகளும் நெறிகளும் தேவை, அதற்கு முதலாவது சரியான கடவுள் தேவை. நம்முடைய வாழ்வை நாம் ஆராயந்தோமென்றால், கடவுளுடைய இரக்கத்தினால் மாத்திரம் நாம் ரட்சிக்கப்படவில்லை, நிச்சயம் அதில்தான் பெரிய பங்கு இருக்கிறது, எனினும் நாம் நம்முடைய முழு இருதயதோடும் மனதோடும் அவரை ஏற்றிருக்கிறோம். எனவே ஒரு மனிதன் அவனாக முன்வராதவரை அவனால் கடவுளை ஏற்க செய்ய முடியாது, ஆனால் நாம் நிச்சயமாக ஒரு ஒளியாகவும் உப்பாகவும் இருந்து, ரட்சிக்கபடுவத்தின் அவசியத்தையும், கடவளுக்குள்ளான மாற்றமுள்ள வாழ்வின் அழகையும் அவர்கள் உணர உதவலாம்.

தொகுப்பு:
கிறிஸ்துவின் வசனம் உங்களுக்குள்ளே சகல ஞானத்தோடும் பரிபூரணமாக வாசமாயிருப்பதாக; சங்கீதங்களினாலும் கீர்த்தனைகளினாலும் ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் போதித்து புத்திசொல்லிக்கொண்டு, உங்கள் இருதயத்திலே கர்த்தரை பக்தியுடன் பாடி;வார்த்தையினாலாவது கிரியையினாலாவது, நீங்கள் எதைச் செய்தாலும், அதையெல்லாம் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே செய்து, அவர் முன்னிலையாகப் பிதாவாகிய தேவனை ஸ்தோத்திரியுங்கள் (கொலோ 3: 16, 17).
கடவுள் மாத்திரமே வெறுமையிலிருந்து காரியங்களை உருவாக்கியவர் மற்றும் அவரே அனைத்திற்கும் மூலக்காரணர். கடவுள் படைத்த அனைத்தும் நல்லதாக இருக்கிறது, மற்றும் மனிதன் கடவுளுடைய சாயலில் படைக்கப்பட்டதால் விசேஷ படைப்பாக உள்ளான். கடவுள் மனிதன் அனைத்தையும் ஆளுகைக்க வேண்டும் என்ற உயரிய நோக்கம் வைத்திருந்தார், ஆனால் அவனுடைய கீழ்படியாமை கடவுளோடு கூட உள்ள உறவில் பெரிய பிளவை ஏற்படுத்தியது. கடவுள் அந்தத் தவறை மன்னித்து மறைத்தாலும், மனிதனுடைய தீவினைகள் பெரிய அளவில் அவனைக் குற்றப்படுத்தின. மனிதன் சந்தோஷத்தை நிறைய வழிகளில் தேடினான் ஆனால் அவனால் நிரந்தர தீர்வைக் கண்டறிய முடியவில்லை. கிறிஸ்து மனிதர்களுக்காக இவ்வுலகில் வந்து, ஒரு முன் உதரணமாக வாழ்ந்து, அவர்கள் குற்ற உணர்வைப் போக்க அனைவரின் பாவங்களுக்காகப் பலி ஆனார். கடுவுளை அறிந்த நாம் கடவுளுக்காக வாழ்ந்து, நம்மை நாமே வார்த்தையிலும் செயலிலும் புதுப்பித்து மற்றவர்களுக்கு முன் உதாரணமாக இருக்க வேண்டும்.

சுய சிந்தனைகள்:
1.  உலகத்தின் வழி விலகுதலிலும் தவறுதலிலும் என்னுடைய பங்கு?



2. வாழ்வில் கடுவுள் இல்லாமல் சந்தோஷத்தைத் தேடிய பொழுது நேரிட்ட தோல்விகளும்  கற்றுக்கொண்ட பாடங்களும்?



3. என் வாழ்வை நான் கடவுளுக்குள்ளாக வடிவமைத்ததும் மெருக்கேற்றியதும்?



4. சுயத்தை மாற்றிக்கொள்வதிலும் உலகத்தில் தாக்கத்தை ஏற்படுத்துதலிலும் என் முயற்சிகள்?



5. இவ்வுலகில் என்னுடைய வாழ்வு முழுதும் என் வாழ்வின் நோக்கம்?

Tuesday, 5 May 2020

அர்த்தமுள்ள வாழ்க்கை


அர்த்தமுள்ள வாழ்க்கை: 

அறிமுகம்:
நாம் தினந்தோறும் மாறிக்கொண்டிருக்கிற உலகில் உள்ளோம். வெளிப்புறமான காரியங்களில் மாத்திரம் மாற்றங்கள் இல்லை, உள்ளார்ந்த காரியங்களிலும் கூட மாற்றம் உள்ளது. நிலையான வரையறைகளின் தொகுப்பு நம்மிடையே இல்லை, மற்றும் நமது முழு இருதயத்தோடும் உள்ளத்தோடும் காரியங்களை ஆராயாது, மாற்றத்திற்கு உள்ளாகிறோம். நம்முடைய மதிப்பீடுகளும் சட்டங்களும் கூட நமது சமூகம், கலாச்சாரம், பொருளாதாரம் போன்றவற்றின் பாதிப்பால் தொடர்ந்து மாறுகிறது. மற்றும் நம்மைச் சுற்றியிருக்கும் நபர்களுள், கவனித்து பின்பற்றுவதற்கு ஏற்பத் திருப்தியுடனும் மகிழ்ச்சியுடனும் வாழும் உண்மையான நல்ல முன் உதாரணங்களும் இல்லை. எல்லோரிடமும் ஒரு வெற்றிடம் உள்ளது, அதைக் கடவுள் என நாம் அழைக்கும் நபர் மாத்திரம் தான் நிரப்ப முடியும். உண்மையான படைப்பாளர் மாத்திரம் தான் தமது படைப்பின் நோக்கத்தினை சரியான வரையறைகளைக் கொண்டு மதிப்பிட முடியும்.

மனிதர்களின் தனித்துவம்:
நாம் அனைவருக்கும் வெவ்வேறு குடும்பபின்னணி, பொருளாதார பின்னணி, சமூக பின்னணி, காலாச்சார பின்னணி, கல்வி பின்னணி, முதலியன உள்ளன, அது நம்முடைய விருப்பங்களுக்கும், குணநலன்களுக்கும் ஏற்றவாறு நம்மைத் தனித்துவமாக்குகிறது.
கடவுள் தம்மோடு உறவுக்கொள்வதற்கும், ஒருவரோடொருவர் உறவுக்கொள்வதற்கும் அனைத்து மனிதர்களையும் தமது சாயலில் படைத்தார். அனைத்து மனிதர்களுக்கும் தேர்ந்தெடுக்கும் உரிமையாகிய சுய சித்தம் உள்ளது ஏனெனில் நாம் கடவுளுடைய சாயல், சுய சித்தம்அவருடைய ஒரு குனநலன்.
நமக்கு வெவ்வேறு விருப்பங்கள், தாலந்துகள், நம்பிக்கைகள், பிரச்சனைகள், சிந்தனைகள், செயல்கள் முதலியன இருக்கிறது, மனிதர்களாகிய நாம் தனித்துவமுள்ளவர்கள். ஆனால் நாம் வெவ்வேராகவோ, ஒரே மாதிரியோ சிந்திக்கும், செய்யும், அனுபவிக்கும் அனைத்தும், நாம் திருப்தியான சந்தோஷமான வாழ்வை கண்டடைய உதவுவதில்லை.
நம்மைச் சுற்றி அனைத்திற்கும் நேர்மறையாகவோ எதிர்மறையாகவோ சில விளைவுகள் உள்ளது என்பதை மறுக்க முடியாது. கடவுள் எப்பொழுதும் அன்பானவராக மனிதனோடு உறவுக்கொள்ள அவனை அவருடைய சாயலிலே வடிவமைத்தார். கடவுள் எப்பொழுதும் நீதியுள்ளவராக மனிதன் சுய சித்தத்தோடு தனது அறிவையும் உணர்வுகளையும் பயன்படுத்தி தேர்ந்தெடுக்கும்படி வடிவமைத்தார். கடவுள் ஒரு குருடரை போல மனிதன் தாம் சொல்வதை பின்பன்ற வேண்டும், நம்ப வேண்டும் எனச் சொல்லி, மனிதனை கட்டாயப்படுத்தவில்லை. கடவுள் மனிதனுக்கு வேண்டிய தேர்வுகளையும் வாய்ப்புகளையும் அவனைச் சுற்றி வழங்கியிருக்கிறார்.

மனிதனின் நிலை:
கடவுள் மேலுள்ள நம்பிக்கை அறிவு, உணர்வு, அனுபவம், பகுத்தறியும் சிந்தை மற்றும் வேறுசில காரியங்களால் இருக்கலாம். அது தனிப்பட்ட நபர்களைப் பொருத்தும், தனிப்பட்ட விதத்தில் கடவுளின் கிரியைகளைப் பொருத்தும் மாறுப்படும். நம்பிக்கைக்கான காரணங்கள் அனைத்து மனிதரிடத்தும் வெவ்வேறாக இருப்பினும், நேர்த்தியான நம்பிக்கை என்பது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை அறிகிற அறிவில் மாத்திரமே பூரணப்படும். எனவே தான் மற்ற நம்பிக்கையைக் கொண்ட மக்கள் (வேதாகமத்தின் இயேசு அல்லாதவரை நம்புகிறவர்கள் ஆயினும்), தங்கள் தேவரின் அன்பையும் உறவையும் அனுபவிப்பதில்லை, மற்றும் அவர்கள் கடவுளைப் பயம், முறைமைகள், ஆசிர்வாதங்கள், பலன், நெறி, ஆர்வம் போன்ற காரங்களால் பின்பற்றுகின்றனர். அவர்கள் முக்கிய காரணியாகிய சத்தியத்தை தவற விடுகிறார்கள், மற்றும் உண்மையற்ற நம்பிக்கைகளைக் கொண்டு தங்களை திருப்திப்படுத்தவும் பலப்படுத்தவும் முயலுகிறார்கள், ஆனால் அவர்களுக்குள் இருக்கும் தீங்கினாலும் தீய எண்ணங்களினாலும் துயரப்படுகிறார்கள்.
“இனி நான் மனிதன் நிமித்தம் பூமியைச் சபிப்பதில்லை, மனிதனுடைய இருதயத்தின் நினைவுகள் அவன் சிறுவயது தொடங்கிப் பொல்லாததாயிருக்கிறது”, என்று கர்த்தர் சொன்னார் (ஆதி 8: 21).

மனிதர்களின் வரையறைகள்:
நம்முடைய சுற்றுச்சூழலின் பாதிப்பினால் நம்மைச் சுற்றியுள்ள நிறைய காரியங்களைக் குறித்து, முன்பே கணித்த யோசனைகளை நாம் கொண்டுள்ளோம், சுற்றுச்சூழல் ஏற்றதாகவும் உண்மையில் திருப்தியளிப்பதாகவும் இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம். சுற்றுச்சூழலின் பாதிப்புகளையும் வேறுப்பாடுகளையும் உடைத்தெறிய, உயர்ந்த ஆளுமைத்தன்மை உடைய படைப்பாளராலேயே அனைவருக்கும் ஒரு சில உயரிய மதிப்பீடுகளைத் தர முடியும். குழப்பம்மில்லாத தெளிவான வாழ்க்கை வாழ வேண்டுமாயின், சர்வவல்லவர் நம் வாழ்வு எப்படி இருக்க வேண்டுமென விரும்புகிறார் என்பதை தெரிந்திருப்பது அவசியம்.
தேவையானது ஒன்று, அதுவே நல்ல பங்கு, விடுப்படாதது, அது இயேசுவும் அவருடைய வார்த்தைகளும் (லூக்கா 10: 38-42).
நிறைய மக்கள் இந்தப் பூவில் வாழும் வாழ்வில் கடுவுள் இல்லாமல், வாழ்வில் நடக்கும் எந்த காரியத்தைக் குறித்தும் கவலைக்கொள்ளாமல் ஏற்புடைய நல்ல வாழ்க்கை வாழ முடியும் எனக் கோருவர். மரணத்திற்கு பிறகு இருக்கும் வாழ்வினையும் காரியங்களையும் புறக்கணித்தாலும், நாம் பூமியில் வாழ்கின்ற வரையில் சார்புடையவர்களாக இருக்கிறோம், எனவே உலகெங்கும் ஏற்புடைய மதிப்பீடுகளைக் கொண்டிருப்பது அவசியம், அது எந்த மனிதராலும் தர முடியாது. வாழ்வின் வெவ்வேறு சூழ்நிலைக்கு ஏற்றவாறு உள்ள சிறந்த மதிப்பீடுகளைப் படைப்பாளரின் வார்த்தையிலிருந்து மாத்திரமே தேடவும் பெறவும் முடியும். ஒரு இயந்திரத்தின் செயல்பாட்டையும் நோக்கத்தையும் எவ்வாறு அதை உருவாக்கியவர் பெரிதும் விவரிக்க முடியுமோ, உண்மையான உயர்ந்த தேவனுடைய வார்த்தையினாலேயே மனிதர்களுடைய நோக்கத்தை விவரிக்க முடியும். நாம் ஏற்றுக்கொள்கின்ற மறுதலிக்கின்ற அனைத்து காரியங்களுக்கும் முதலில் நாம் காண்கின்ற வகையில் இவ்வுலகிலும், பிற்காலத்தில் வெளிப்படப் போகிற காரியங்களிலும் விளைவுகள் இருக்கும்.

முழுமையில்லாது, காரியங்களின் வெறுமை
மனிதன் வலிமையற்றவர்களை ஒடுக்கி வலிமையுள்ளவனாகக் காண்பிக்க முயன்றான், உயர்ந்தவனாகக் காண்பிக்க வானுலகை அடைய முயன்றான், பொருளையும் மந்தையையும் பெருக்கி பணக்காரனாகக் காண்பிக்க முயன்றான், இயற்கைக்கு மாறான விருப்பங்களால் தற்காலிகமாகத் திருப்திப்படுத்தி இன்பமாகக் காண்பிக்க முயன்றான். எல்லாவற்றிலும் கடுவுளை சார்ந்த ///மதிப்பீடுகள் இல்லாமல் முக்காலத்தும் அவனுக்குத் தோல்விகளே. கடவுள் வாழ்வில் இல்லாமல் ஒரு மனிதன் நன்மைகளே செய்தாலும், இறுதியில் திருப்தி இல்லாமல் அர்த்தமற்றதாய் உணர்வர், ஏனெனில் சில நேரங்களில் சுற்றியுள்ள மனிதர்கள் அந்த நன்மைகளைப் பெற தகுதியுடையவராய் இருப்பதில்லை.
அனைத்து சிற்றின்பங்களையும், பதவிகளையும், பொருட்களையும், வெளிப்பாடுகளையும் அனுபவித்த ஒரு ராஜா எழுதுவதாவது, “ எல்லாம் மாயை, சூரியனுக்கு கீழே மனிதன் படுகின்ற பிரயாசங்களுக்கு பலன் என்ன? “ (பிரசங்கி 1: 2, 3).
ஒரு நபர் தம்முடைய கனவுகளையும் விருப்பங்களையும் நிவிர்த்தி செய்தபிறகு, அனைவரும் அவரைப் புகழுவதால் மகிழ்ச்சி அடைவார். ஆனால் அதன் பிறகு, அந்த நபர் வேறு கோணத்தில் வேறு மாதிரியாகத் தன்னுடைய இலக்குகளை நிர்ணயித்துத் தொடர்ந்து அதைப் பழக்கமாக மாற்றுவார். நாம் கவனமாகக் கவனித்தால், அதே மாதிரியாக கனவுகள் இருந்தும் அதற்கான எந்த முயற்சியும், உழைப்பும் இல்லாது தன் நிலையிலேயே இருக்கும் நபரும் இருக்கிறார். அவர் தன்னுடைய வழக்கங்களான உண்ணுதல், அருந்துதல், உறங்குதல் முதலிய காரியங்களை எந்தவொரு சாதனையும் இல்லாமல், தனக்கு இருக்கும் காரியங்களைக் கொண்டு வாழ்வை மகிழ்ச்சியுடன் அனுபவிப்பார். மிகவும் அதிகம் அறிவுள்ள உயர்ந்த மனிதரானாலும், சாதாரண மனிதரானாலும், பணக்காரானாலும் ஏழையானாலும், அனைவரும் ஒரு நாள் கல்லறையைச் சந்தித்துதான் ஆக வேண்டும். எனினும் சில நபர் தாங்கள் பணக்காரராகவும் ஆள்பவராகவும் இருப்பின், மக்கள் தங்களை உயர்ந்தவராக எண்ணி நிறைய காலம் நினைவில் வைத்திருப்பார்கள் என எண்ணுவர். ஆனால் ஒரு நபர் இறந்த பிறகு தனிப்பட்ட விதத்தில் அவருக்கு அது பலன் அளிக்காது, அந்த நபர் ஒன்றும் அறியார், மற்றும் மற்றவரின் வியப்பிற்க்காக வாழ்ந்துக் கொண்டிருந்தால், தன் வாழ்வின் இறுதியில் உண்மையான சந்தோஷத்தைக் கண்டடைய முடியாது.

கடவுளின் தேவை:
அனைத்து மக்களும் தங்கள் வாழ்வின் நோக்கத்தைத் தெரிந்துக்கொள்ள கடவுளோடு உள்ள உறவு மிகவும் அவசியம், ஏனெனில் உலகம் கடவுளிடத்தில் இருந்துதான் தொடக்கத்தை கொண்டுள்ளது. நிறைய கோட்பாடுகளும் சிந்தனைகளும் இருப்பினும், மனிதன் தன்னை படைத்த தேவனிடம் இருந்துதான் உண்டாகினான் என்பது மறுக்க முடியாத உண்மை. தேவனுடைய வார்த்தையின்படி நாம் வாழும் பொழுதுதான், கடினமான கஷ்டமான சூழல்கள் மத்தியிலும் நாம் நம்முடைய வாழ்வின் சந்தோஷத்தையும், சமாதானத்தையும், திருப்தியையும் பெற முடியும். நாம் தேவனை சார்ந்திருந்து, அவரை நோக்கி ஜெபித்து துதித்து அவருடைய பராக்கிரமத்தையும், சர்வ வல்லமையையும் நினைவுக்கூறும் பொழுதுதான், நம்மால் உலகில் உள்ள சூழ்நிலைகளைச் சிறந்த முறையில் சந்தித்து மேற்கொள்ள முடியும், கடவுளைத் தவிர்த்து நம்மை மேற்க்கொள்ளும் காரியம் ஒன்றுமில்லை என்பதை நிச்சயிக்க முடியும். உலகில் உள்ள அனைத்து காரியங்களுக்குமான தீர்வு அதனுடைய மூலக்காரனர் இடமிருந்துதான் கிடைக்கும். கடவுளுடைய வார்த்தையைக் கேட்பதும், கடவுளோடு பேசுவதும், சரி தவறை பகுத்தறிவதற்க்கும், சமநிலையோடு அனைத்து காரியங்களுக்கும் பின்னிருக்கும் நோக்கத்தைப் புரிந்துக்கொள்ளவும், அவர் படைத்த அனைத்து காரியங்களைச் சரியாக உபயோகிக்கவும் உதவுகிறது.
தேவன் படைத்ததெல்லாம் நல்லதாயிருக்கிறது, ஸ்தோத்திரத்தோடே ஏற்றுக்கொள்ளப்படுமாகில் ஒன்றும் தள்ளப்படத்தக்கதல்ல. அது தேவவசனத்தினாலும் ஜெபத்தினாலும் பரிசுத்தமாக்கப்படும் (1 தீமோத்தேயு 4: 4, 5).

இயேசு கிறிஸ்துவின் மூலம் மனிதர்களுக்கான தீர்வு:
பாவ சுபாவத்தினாலும், கடவுள் மனிதர்களையும் உலகில் மற்ற காரியங்களையும் படைத்த பெரிய நோக்கத்திலிருந்து விலகியதாலும், மனிதனுடைய தேடுதல்கள் மற்றும் தோல்விகள் அவனுக்கு எந்த நம்பிக்கையும் தரவில்லை, வாழ்வை அதனுடைய மதிப்பில் பார்க்க முடியாமலும் ஆக்கியது. ஆனால் கிறிஸ்து பல நூற்றாண்டுகளாகக் கோணலான வழிகளை நேர்ப்படுத்துவதற்கு விடுவிப்பதற்கான நம்பிக்கையாக அறிவிக்கப்பட்டுள்ளார். மனிதனும் கடவுளும் ஒருங்கிணைய சிலுவையில் கிறிஸ்துவினுடைய மீட்பின் கிரியையை நம்பியவர்கள், நம்புபவர்கள், இனியும் நம்புபவர்கள் அனைவரும், மனிதர்களுடைய தவறான விருப்ப தேர்வுகளால் மனிதருக்கும் கடவுளுக்கும் இடையில் உள்ள பிளவிலிருந்து மீட்பை பெறுவர்.
யோவான் 3: 16 இல் இப்படியாகக் குறிப்பிடப்பட்டுள்ளது, “தேவன் தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார். அவரை விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படான், விசுவாசியாதவனோ தேவனுடைய ஒரேபேரான குமாரனுடைய நாமத்தில் விசுவாசமுள்ளவனாயிராதபடியால் அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்பட்டாயிற்று. ஒளியானது உலகத்திலே வந்திருந்தும் மனுஷருடைய கிரியைகள் பொல்லாதவைகளாயிருக்கிறப்படியால் அவர்கள் ஒளியைப் பார்க்கிலும் இருளை விரும்புகிறதே அந்த ஆக்கினைத்தீர்ப்புக்குக் காரணமாயிருக்கிறது. பொல்லாங்கு செய்கிற எவனும் ஒளியைப் பகைக்கிறான், தன் கிரியைகள் கண்டிக்கப்படாதபடிக்கு ஒளியினிடத்தில் வராதிருக்கிறான்.”

கடவுளுக்குள் வாழ்வை வடிவமைத்தல்:
கடவுள் அன்புள்ளவரும் அக்கரையுள்ளவருமாக இருக்கிறார். மனிதர்களுக்கு மிகவும் பெரிய நோக்கத்தை வைத்துள்ளார். அவர் நம்முடைய அனைத்து தேவைகளையும் தருவதற்கு வல்லமையுள்ளவர், நம்முடைய பலவீனங்களில் உதபுபவர், அவரை நம்பும்பொழுது அடிப்படை தேவைகளுக்குக் கூட நாம் வருந்த வேண்டிய அவசியமில்லை. கடவுள் அனைத்தும் வல்லவர், அனைத்தும் அறிந்தவர், அனைத்து இடங்களிலும் இருப்பவர், மற்றும் நம்முடைய அனைத்து உடல் சார்ந்த, உணர்வு சார்ந்த, அறிவு சார்ந்த பிரச்சனைகளுக்கும் அவரைச் சார்ந்து இருக்கலாம், அவர் நமக்கு வைத்துள்ள பெரிய நோக்கத்தில் பங்குள்ளவர்களாகவும் இருக்கலாம். கடவுள் நீதியுள்ளவராகவும், மன்னிப்பவராகவும், அக்கறையுள்ளவராகவும் இருக்கிறார், நாம் எது சரியோ அதற்காக நிலைத்திருப்பதும், தவறுகளை அறிக்கையிடுவதும், நம்முடைய செயல்களினால் ஏற்படும் விளைவுகளைச் சந்திக்க பலன் பெற்று விடுதலை பெறுவதும், தண்டனையிலிருந்து தப்பிப்பதும் அவசியம்.
தேவன் தமது சாயலாகவும் தமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக என்றார். அவர்கள் சமுத்திரத்தின் மச்சங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், மிருகஜீவன்களையும், பூமியனைத்தையும், பூமியின்மேல் ஊரும் சகலப் பிராணிகளையும் ஆளக்கடவர்கள் என்றார். (ஆதியாகமம் 1:26).
வேதாகமத்தில் பிரதான கற்பனையாகக் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக, இது முதலாம் பிரதான கற்பனை. இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால், உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே. இவ்விரண்டு கற்பனைகளிலும் நியாயப்பிரமாணம் முழுமையும் தீர்க்கதரிசனங்களும் அடங்கியிருக்கிறது என்றார் (மத்தேயு 22: 36-40).

என்றென்றும் நிலைக்கும் மகிழ்ச்சி:
என்றென்றும் நிலைக்கும் மகிழ்ச்சி:
எப்பொழுதும் இந்தப் பூமியில் மனிதன் அனுபவிக்கத்தக்கதாகக் கடவுள் படைத்த சந்தோஷங்களும் இன்பங்களும் இருக்கின்றன, ஆனால் கடவுள் நிர்ணயித்த நோக்கத்தின்படி நம்முடைய வாழ்வை நாம் வடிவமைக்கும் பொழுதுதான் நீடித்திருக்கும் சந்தோஷம் சாத்தியமாகும். கடுவுளை அறியாமல் அவருடைய நோக்கத்தைத் தெரியாமல் ஒரு மனிதன் தன்னுடைய வாழ்வில் சந்தோஷத்தைக் கண்டடைய முயற்சிக்கும்பொழுது, தற்காலிக சந்தோஷங்கள் கூட ஒரு சமயத்தில் கசப்பாக மாறிவிடும். அனைத்து வல்லமையும், பதவியும், இன்பமும், செல்வமும் அனுபவித்த ஒரு மனிதன் தான் எழுதிய புஸ்தகத்தில் பூமியில் சந்தோஷமாக இருப்பதை குறித்து இப்படியாக எழுதுகிறார்,

“மனிதன் சூரியனுக்குக்கீழே படுகிற எல்லாப் பிரயாசத்தினாலும் அவனுடைய இருதயத்தின் எண்ணங்களினாலும் அவனுக்குப் பலன் என்ன? அவன் நாட்களெல்லாம் அலுப்புள்ளது, அவன் வேலைகள் வருத்தமுள்ளது, இராத்திரியிலும் அவன் மனதுக்கு இளைப்பாறுதலில்லை, இதுவும் மாயையே. மனிதன் புசித்துக் குடித்து, தன் பிரயாசத்தின் பலனை அனுபவிப்பதைப் பார்க்கிலும், அவனுக்கு ஒரு நன்மையும் இல்லை, இதுவும் தேவனுடைய கரத்திலிருந்து வருகிறது.” –பிரசங்கி 2: 22-24
ஆனால் உண்மையான சந்தோஷம் மற்றும் சமாதானம் நாம் உடல், உணர்வு அல்லது அறிவு சார்ந்த காரியங்களில் அனுபவிப்பது மாத்திரம் அல்ல, ஆனால் அனைத்தையும் சேர்த்து சமநிலையில் ஆவிக்குரிய காரியத்தையும் சேர்த்து உபயோகிப்பது, அது உண்மையான கடவுளை அறிகிற அறிவினால் மாத்திரமே சாத்தியம்.
இயேசு கிறிஸ்துவின் மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனை பேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங் கொடுத்தார். அவர்கள் இரத்தத்தினாலாவது மாம்ச சித்தத்தினாலாவது புருஷருடைய சித்தத்தினாலாவது பிறவாமல் தேவனாலே பிறந்தவர்கள் (யோவான் 1: 12. 13).
ஆவியின் கனிகளாவன அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம் (கலாத்தியர் 5:22).

சுயத்தை கடவுளுடைய வார்த்தையால் சுத்திகரித்தல்:
நாம் வாழ்வில் நிறைய காரியங்களைச் செய்ய முடியும், ஆனால் அனைத்தும் ஏற்புடையதாயும் உபயோகமுள்ளதாயும் இருக்காது. பொருள் சார்ந்த காரியங்கள் நாம் வாழ்வதற்கு அவசியமாகும், ஆனால் அவை நம் வாழ்வை அமைப்பதில்லை, அவை வாழ்விற்கு உதவுகிறது, அதை உணராமல் அவற்றிற்கு முன்னுரிமை அளிக்கிறோம். நாம் நிறைய நேரங்களில் சுயத்திற்கு மாத்திரம் அதிக கவனம் செலுத்துகிறோம், மற்றும் மற்றவர்களைப் பாதிக்கும் காரியங்களைக் குறித்து அதிகம் யோசிப்பதில்லை. காரியங்களை வேதாகமத்தை கொண்டும் உயரிய வாழ்விய மதிப்பீடுகளைக் கொண்டும் முன்னுரிமைப்படுத்துவது ஒரு நபர் இயேசு கிறிஸ்துவை நம்புபவராகவும் அவருடைய சீஷராகப் பிறருடைய நன்மையைத் தேடுபவராகவும், அவர் தம் சுயத்தை மாத்திரம் நோக்காமலும் இருக்க உதவும் (பிலிப்பியர் 2:3), மற்றும் சுய நலம் அற்றவர்களாய் புதியதாக நம்புபவர்களின் விசுவாசத்தை பாதிக்காமலும் இருக்க உதவும் (1 கொரிந்தியர் 10: 23-33). கடவுளைச் சார்ந்திருந்து அவருக்கு முதலாவது முன்னுரிமை அளித்து அவரை மையமாக வைப்பது நம்முடைய இருதயத்தையும் வாழ்வையும் மாற்றும்.
கடவுளுடைய வார்த்தையை வாசிப்பது, புரிந்துக்கொள்வது, பின்பற்றுவது நாம் அதை அறிந்துக்கொள்ளவும் சரியான வாழ்வின் பாதையைச் சுவைக்கவும் உதவும். கடவுள் சத்தங்கள், அறிகுறிகள், சின்னங்கள், சூழ்நிலைகள், சிந்தனைகள், முதலியன மூலம் நம்மிடம் பேச முடியும், ஆனால் நாம் அதை வேதாகமத்தோடு சேர்த்து சரிப்பார்ப்பது அவசியம், ஏனெனில் கடவுள் மாறாதவர், அவர் தாம் வேதாகமத்தின் சூழ்நிலைகளினாலும் போதனைகளினாலும் கூறிய காரியங்களை என்றும் மாறுப்படுத்துவதில்லை, மற்ற அனைத்து வழிகளும் மாறுப்படக்கூடும். கடவுளிடமிருந்து காரியங்களைக் கேட்கும் சிறந்த வழி வேதாகமம் மற்றும் அதில் புதைந்திருக்கும் மதிப்பீடுகளே ஆகும். கடவுளிடமிருந்து கேட்பது நாம் கடவுளை அறியவும், நம்மை நாமே அறியவும், நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை அறியவும், நாம் செய்யும் காரியங்கில் எது சரி என்பதையும் அறியவும் உதவும். வேதாகமத்தில் உள்ள மதிப்பீடுகள் நம்முடைய வாழ்விற்கும் வெவ்வேறு சூழ்நிலைகளுக்கும் ஏற்புடையது, அதுவே நாம் கடவுளிடமிருந்து கேட்பதை அனுபவிக்கவும் நிச்சயிக்கவும் செய்யும்.
கடவுளுடைய தன்மையாக வேதாகமம் குறிப்பிடுபவை திருப்திகரமானவை, கட்டளைகள் நம்முடைய வாழ்வின் நடக்கைகளுக்கு மெய்யான ஒளி, சத்தியங்கள் மீட்பிற்கும் சமாதானத்திற்கும் பெரிய நம்பிக்கை, உதாரணங்களோடு கூட விட்டுவிட வேண்டிய பாவங்கள் மிகவும் சாத்தியமானவை, வாழ்விற்கு ஏற்புடையவை.

முடிவுரை:
கடவுள் மாத்திரமே ஒன்றுமில்லாததிலிருந்து ஏதோ ஒன்றை படைத்தார், மற்றும் கடவுளே அனைத்திற்கும் மூலக்காரணர். கடவுள் படைத்த அனைத்தும் நல்லதாயிருக்கிறது மற்றும் மனிதன் கடவுளுடைய சாயலில் படைக்கப்பட்ட விசேஷித்த படைப்பாக உள்ளான். மனிதன் உலகை ஆளும்படியாகக் கடவுள் அவனுக்குப் பெரிய நோக்கத்தை வைத்துள்ளார், அனால் கீழ்படியாமை மனிதனுக்கும் கடவுளுக்கும் இடையே பெரிய பிளவை ஏற்படுத்தியது. மனிதன் எல்லா வழிகளிலும் சந்தோஷத்தைத் தேடினான், ஆனால் நிரந்தர தீர்வை அவனால் கண்டுப்பிடிக்க முடியவில்லை. கிறிஸ்து உலகில் உள்ள அனைத்து மனிதர்களும் முன்னுதாரணமான வாழ்வை வாழ வேண்டும் எனவும், குற்ற உணர்வை எடுத்துப்போட வேண்டுமெனவும் மனிதரானார், மனிதர்களுடைய பாவங்களுக்காகப் பலியானார். வாழ்வில் உண்மையான அர்த்தத்தையும், இந்தப் பூமியில் வாழ்வின் நோக்கத்தையும் அறிந்துக்கொள்ள, நம்மை நாமே புதுபித்துக்கொண்டு கடவுளையும் சுயத்தையும் தினந்தோறும் தெரிந்துக்கொள்ள வேண்டும்.
எல்லா பொருட்களையும், இன்பங்களையும், வெளிப்பாடுகளையும் அனுபவித்த மனிதன் (பெரும்பாலும் சாலமோன் ராஜா) இப்படியாக எழுதுகிறார், “தேவனுக்கு பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள், எல்லா மனிதர் மேலும் விழுந்த கடமை இதுவே” –பிரசங்கி 12:13
சுற்றுப்புற சூழ்நிலைகள் நம்முடைய தீர்மானங்களைப் பாதித்தாலும், நாம் கடவுளை நம்பும்பொழுது அவர் கட்டுப்பாட்டில் உள்ளார். நாம் கடவுளுக்குள்ளாக வளரும்பொழுது, கடவுள் நம்முடைய தீர்மானங்களில் நாம் எந்தச் சூழ்நிலையிலும் நிலைநிற்க பலம் அளிக்கிறார். நமக்குள்ளேயும் நமக்கு வெளியேயும் நிறைய போராட்டங்கள் இருப்பினும் பொறுமையோடு சரியான வழியில் கடவுளுடைய வழிநடத்துதலை கண்டடையும்பொழுது சந்தோஷம் சமாதானத்தோடு கூட அதிலிருக்கும் திருப்தியை கண்டடைய முடியும்.
கிறிஸ்துவை சரியான விதத்தில் ஏற்றுக்கொள்ளுதல், நம்புதல், அர்ப்பணித்தல் நாம் விடுவிக்கப்பட்டிருக்க உதவும், குற்றங்களும் சுயநலமும் இல்லாத முன்னுதாரணமான வாழ்வை, மரியாதையோடு, உண்மையோடு, நீதியோடு, அக்கறையோடு, அன்போடு, தாழ்மையோடு, மேன்மையோடு, திறந்த மனதோடு, பொறுமையோடு வாழ உதவும், கடிந்துக்கொள்ளுதலிலும் உபசரிப்பதிலும் குணத்திலும், உபயோகத்திலும், மதிப்பீட்டிலும், வேளையிலும் சிறந்த முறையில் பற்றுடையவராக ஆர்வமுடையவராக இருக்க உதவும்.


 சுய சிந்தனைகள்:
1.    என்னுடைய தனிச்சிறப்பு மற்றும் அடையாளம்?



2.    என்னுடைய தற்போதைய நிலைகள் மற்றும் இயலாமைகள்?



3.    என்னைச் சுற்றியுள்ள காரியங்களின் வெறுமையும், முழுமையில்லா தன்மையும் பற்றி என் உணர்வுகள் மற்றும் சிந்தனைகள்?



4.    எனக்குக் கடவுளின் தேவை மற்றும் கடவுளுக்குள் என்னுடைய வாழ்வை விவரித்தல்?



5.    என்னுடைய வாழ்வை மிகவும் அர்த்தமுள்ளதாக மாற்ற என் தீர்மானங்கள்?