Sunday, 3 May 2020

வேதாகமத்தின் ஆழ்ந்ததன்மை

 தனிநபர் வேத ஆராய்ச்சி (PBS- Personal Bible Study)

I. தனிநபர் வேத ஆராய்ச்சி என்றால் என்ன?           
தனிநபர் வேத ஆராய்ச்சி என்பது வேதாகமத்தில் உள்ள அனைத்தையும் ஆழமாக படித்துப் புரிந்துக் கொள்ளவும், தேவனுடைய காரியங்களில் வளரவும், தேவனை தெரிந்துக் கொள்ளவும், தேவனை நேசிக்கவும், தேவனுக்கு பயப்படவும், நம்மை நாமே தெரிந்துக்கொள்ளவும், ஆவிக்குரிய வாழ்வில் முதிர்ச்சியடையவும் உதவுகிறது.
உண்மையான கடவுள் ஒவ்வொரு தனிப்பட்ட நபருக்கும் கடுவுள், அவர் தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவரோடும் பேசுபவர். தம்மை தேடுகிறவர்களுக்கும், தம்மிடத்தில் கேட்கிறவர்களுக்கும், தம்முடைய சித்தத்தை வெளிப்படுத்துகிறவராக இருக்கிறார். நாம் தேவனுடைய காரியங்களை மிக நெருங்கிய முறையில் ருசிப்பதற்கும், மற்றவர்களின் போதனைகளைச் சரிப்பார்ப்பதற்கும், அவருடைய சித்தத்தை அறிந்துக் கொள்வதற்கும் தனிநபர் வேத ஆராய்ச்சி மிகவும் அவசியம்.

II. ஏன் தனிநபர் வேத ஆராய்ச்சி நமக்குத் தேவை?                                         
Ø  இயேசு கிறிஸ்து தேவனுடைய குமாரன் என்று விசுவாசிக்கவும், அவருடைய நாமத்தினால் ஜீவன் அடையவும் வேதவாக்கியங்கள் எழுதப்பட்டுள்ளது (யோவான் 20: 31).
Ø  வேதவாக்கியங்கள் நாம் இரட்சிப்பில் வளர உதவும் (1பேதுரு 2:2).
Ø  இயேசுவின்  உபதேசத்தை பற்றிக்கொள்ளும் விசுவாசிகள், சீஷர்களாவர். அது சத்தியத்தை வெளிப்படுத்தும், சத்தியம் விடுதலையாக்கும். (யோவான் 8:31, 32).
Ø  வேத வசனங்கள் நாம் பரிசுத்தமாக இருக்க உதவும், மற்றும் பாவங்களிலிருந்து நாம் விலகவும் உதவும் (சங்கீதம் 119: 9-11).
Ø  தேவனுடைய கட்டளைகள் நம்மை ஞானவான்களாக்கும் (சங்கீதம் 119:98).
Ø  நியாயபிரமான புத்தகம் நம்முடைய வழிகள் வளமாகவும், வெற்றிகரமாகவும் இருக்க உதவும் (யோசுவா 1:8, சங்கீதம் 1:1-3).
Ø  நியாயபிரமானங்களை படித்து அதைக் கடைப்பிடிப்பது, மற்றவர்களுக்குப் போதிக்க உதவும் (எஸ்ரா 7:10).
Ø  நாம் தேவனை நேசிக்க வேண்டுமானால், அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்படிய வேண்டும் (யோவான் 14:15). அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்படிய வேண்டுமானால், அதைப் படித்து, தெரிந்துக் கொண்டிருக்க வேண்டும்.
Ø  நாம் தேவனால் அங்கீகரிக்கப்பட்ட ஊழியக்காரராய் இருப்பதற்கும், சத்தியத்தை சரியான முறையில் கையாளவும், தேவனுடைய வார்த்தையைப் படிப்பது அவசியம் (2தீமோத்தேயு 2:15).
Ø  வேதவாக்கியங்களெல்லாம் தேவஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படி. அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துக்கொள்ளுதலுக்கும் சீர்திருத்தலுக்கும், நீதியை படிப்பித்தலுக்கும் உபயோகமுள்ளவைகளாயிருக்கிறது )2தீமோத்தேயு 3:16, 17 ).

III. யார் தனிநபர் வேத ஆராய்ச்சி பண்ணலாம்?
Ø  யார் தேவனாகிய இயேசுவை பற்றி அறிந்துக்கொண்டு, அவரை விசுவாசிக்க வேண்டுமென நினைக்கின்றார்களோ, அவர்கள் தனிநபர் வேத ஆராய்ச்சி செய்யலாம் (யோவான் 20: 31). வேத வசனங்கள் தேவ ஆவியானவரால் அருளப்பட்டதால், தேவ ஆவி இல்லாதவர்கள் அதை அப்படியே ஏற்றுக்கொள்ளமாட்டார்கள், அது ஆவிகேற்றபடி ஆராய்ந்து நிதானிக்கபடுகிறவைகளானதால், அவர்களுக்கு அது பைத்தியமாய் தோன்றும் (1 கொரிந்தியர் 2;14).
Ø  புதிதாய் பிறந்த குழந்தை பாலை வாஞ்சிப்பது போல, வேத வாக்கியங்களை வாஞ்சித்து ருசிப்பவர்கள் (1பேதுரு 2:3).
Ø  தேவனுடைய வார்த்தையைத் தேனிலும் மதுரமாய் கருதுகிறவர்கள் (சங்கீதம் 119:103, 104).
Ø  தேவனுடைய வார்த்தையைப் பாதைக்கு வெளிச்சமாய் கருதுகிறவர்கள் (சங்கீதம் 119:105, 106).
Ø  வேதவசனத்தை போதிப்பவர்கள்/ போதிக்க விரும்புகிறவர்கள் (எஸ்ரா 7:10, ஏசாயா 50:4).
Ø  வேதவாக்கியங்களெல்லாம் தேவஆவியினால் அருளப்பட்டிருக்கிறதென்றும்; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படி. அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும் சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறதென்றும் விசுவாசிப்பவர்கள் (2தீமோத்தேயு 3:16, 17).
Ø  எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோசத்தை தரக்கூடிய நற்செய்தி வேதாகமத்தில் உள்ளது என்பதை நம்பி, அனுபவிப்பவர்கள் (லூக்கா 2:10).
Ø  நற்குணசாலிகளாய் இருக்க தேவனுடைய வார்த்தையை விரும்பி ஏற்றுக்கொள்ளுகிறவர்களும், ஆராய்ந்து பார்பவர்களும் (அபோஸ்தலர் 17:11).
Ø  வேதாகமம் சொல்லும் காரியங்களோடு எதையும் கூட்டவோ குறைக்கவோ வேண்டாமென நினைப்பவர்கள். (வெளிப்படுத்தின விசேஷம் 22:18, 19).
ஆகிய அனைவரும் தனிநபர் வேத ஆராய்ச்சி பண்ணலாம்.

IV. எங்கே நாம் தனிநபர் வேத ஆராய்ச்சி பண்ணலாம்?
Ø  இது தனிநபர் வேத ஆராய்ச்சி, எனவே தனிமையான, அமைதியான இடம் மிகவும் உகந்ததாகும்
Ø  காற்றோட்டமுள்ள, வெளிச்சமான இடம் மிகச் சிறந்த தேர்வாகும்.
Ø  இடம் கூச்சல் உள்ளதாகவும், கவனத்தை திசைத்திருப்ப கூடியதாகவும் இருக்க கூடாது.
Ø  இடம் மனதிற்கு உகந்ததாகவும், சுத்தமாகவும் இருக்க வேண்டும்.
Ø  உங்கள் வீட்டில் உள்ள சிறிய அறையாக இருந்தாலும் சரி, இல்லையேல் புல்வெளியாக இருந்தாலும் சரி, உங்களுக்கு அமைதியான சூழலைத் தருவதாயும், உங்கள் கவனத்தை பெரிதும் பாதிக்காததாயும் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

V. எப்பொழுது நாம் தனிநபர் வேத ஆராய்ச்சி பண்ணலாம்?
Ø  தனிநபர் வேத ஆராய்ச்சி செய்வதற்கு நமக்கு அதிக நேரம் தேவை, குறைந்தது ஒரு மணி நேரம். தேவன் போதிப்பதற்கு ஏற்றப்படியும் உங்கள் விருப்பத்தின்படியும் மிக அதிக நேரமும் செலவாகலாம்.
Ø  நீங்கள் நேரத்தைச் சரியாக நிர்வகிக்க முடியாமல் இருந்தால், வாரத்திற்கு ஒரு முறை, இரண்டு வாரத்திற்கு ஒரு முறையென முறைப்படுத்தி, அதைப் பின்பற்றலாம்.
Ø  வார இறுதி நாட்களில் நாம் அழுத்தம் குறைந்தவர்களாய் இருப்போம், சிந்தனைகளும் தெளிவானதாக இருக்கும், நீங்கள் நிதானமாகக் கூடுதல் நேரமும் பயன்படுத்த முடியும்.
Ø  சந்தேகம் வரும் நேரங்களிலும், போதகர் வேதாகமத்தின் கருப்பொருளுக்கு எதிர்மறையாய் பேசும்பொழுது, அதைத் தெளிவுப் படுத்திக் கொள்வதற்கு தனிநபர் வேத ஆராய்ச்சி பண்ணலாம்.
Ø  நாம் குழு வேத ஆராய்ச்சியை நடத்தும் பொழுதும், மற்றவருக்குப் போதிக்கும் பொழுதும், தனிநபர் வேத ஆராய்ச்சி பண்ணலாம்.

VI. எப்படி தனிநபர் வேத ஆராய்ச்சி பண்ணலாம்?
Ø  நாம் பெரிதும் கவலைக்கொள்ள தேவை இல்லை. ஆவியானவர் எல்லா சத்தியத்திற்கொள்ளும் வழி நடத்துவார். (யோவான் 16:13, 14:26) எல்லா விசுவாசிகளுக்குள்ளேயும் பரிசுத்தாவியானவரின் முத்திரையுள்ளது (எபேசியர் 1:13), எனவே தேவனை நாடி, முதலும் முற்றும் அவரையே சார்ந்திருத்தல் அவசியம்.
Ø  நீங்கள் படிக்கும் புத்தகத்தை, அதிகாரத்தை, பகுதியை, நேரத்தை, வேண்டிய மற்ற காரியங்களை ஒருங்கிணைத்துத் திட்டமிடுங்கள்.
Ø  நீங்கள் திட்டமிட்ட பகுதியை இரண்டு மூன்று முறை படியுங்கள்.
Ø  வேதாகமத்தின் முழு கருப்பொருள் எப்பொழுதும் உங்கள் மனதில் இருக்கட்டும், வேதாகமம் வேதாகமத்திற்கு பொருள் தரட்டும்.
Ø  வேதாகமத்தில் உள்ள புத்தகங்கள், ஆக்கியோன், கருப்பொருள், இலக்கிய வடிவம், மொழிகளின் வேறுபாடுகள், பொழிபெயர்ப்புகள், பதிப்புகள், வெளியாகாம புத்தகங்கள், வரலாறு ஆகியவற்றை குறித்த அறிவும் அவசியமாகும்.
Ø  நமக்கு இருக்கின்ற முறைமைகளையும் நுட்பங்களையும், வேதாகமத்தில் உள்ள காரியங்களை ஒழுங்காகவும் நேர்த்தியாகவும் கவனித்து விளக்கமறிவதற்கு பயன்படுத்தலாம்.

வேதாகமத்தை படிக்கப் பயன்படும் ஒரு சில வழிமுறைகள்:
v  ஒருமுகப்படுத்தும் வேத ஆராய்ச்சி முறைமை (The Devotional Method of Bible Study)
v  அதிகாரத்தைத் தொகுக்கும் வேத ஆராய்ச்சி முறைமை (The Chapter Summary Method of Bible Study)
v  குணம் பண்புகள் சார்ந்த வேத ஆராய்ச்சி முறைமை (The Character Quality Method of Bible Study)
v  கருப்பொருளைச் சார்ந்த வேத ஆராய்ச்சி முறைமை (The Thematic Method of Bible Study)
v  வாழ்க்கை வரலாறு சார்ந்த வேத ஆராய்ச்சி முறைமை (The Biographical Method of Bible Study)
v  தலைப்பு சார்ந்த வேத ஆராய்ச்சி முறைமை (The Topical Method of Bible Study)
v  சொற்கள் சார்ந்த வேத ஆராய்ச்சி முறைமை (The Word Study Method of Bible Study)
v  புத்தக பின்னணியை சார்ந்த வேத ஆராய்ச்சி முறைமை (The Book Background Method of Bible Study)
v  புத்தக மேற்பார்வையை சார்ந்த வேத ஆராய்ச்சி முறைமை (The Book Survey Method of Bible Study)
v  அதிகாரத்தை ஆராயும் வேத ஆராய்ச்சி முறைமை (The Chapter Analysis Method of Bible Study)
v  புத்தக கூட்டிணைப்பு வேத ஆராய்ச்சி முறைமை (The Book Synthesis Method of Bible Study)
v  வசனம் வசனமாய் விளக்கமளிக்கும் வேத ஆராய்ச்சி முறைமை (The Verse by Verse Method of Bible Study)
v  ஸ்வீடன் நாட்டு வேத ஆராய்ச்சி முறைமை (Swedish Method)
v  சிபா - வேதவாக்கியம், உள்நோக்கு, ஜெபம், செயல்) வேத ஆராய்ச்சி முறைமை (SIPA (Scripture, Insight, Prayer, Action) Method
v  கோமா (சூழ்நிலை, கவனித்தல், பொருள், செயல்படுதல்) COMA (Context, Observation, Meaning, Application) Method
v  தொகுப்பாய்வு வேத ஆராய்ச்சி முறைமை (கவனித்தல், விளக்கமறிதல், கடைப்பிடித்தல் முறைமை) (Inductive Bible Study (Observation, Interpretation, Application (OIA)) Method)

தனிநபர் வேத ஆராய்ச்சிக்குப் பயன்படும் வெவ்வேறு கருவிகள்:
அத்தியாவசிய கருவிகள்
ü  வேதம் (Bible) நமது உச்சக்கட்ட ஆதார மூலமாகும் (அது நாம் புரிந்துக்கொள்ள கூடிய மொழியிலோ, நமது மூல மொழியிலோ இருக்கலாம்)
ü  குறிப்பேடு (Note book)
ü  பேனா (Pen)
மற்ற பயனுள்ள கருவிகளாவன
ð  இரண்டாவது மொழியில் உள்ள வேதாகமம் (ங்கள்) (பதிப்புகள் (Versions) மிகக் கவனத்துடன் தேர்ந்தெடுக்கபட வேண்டும்)- தலைப்புகளுள்ள வேதாகமம் (Topical bible), விளக்கவுரை வேதாகமம் (Expository Bible)
ð  ஆராய்ச்சி வேதாகமம் (Study Bible)
ð  வேத அகராதி(Bible Dictionary), மொழி அகராதி (Language Dictionary), கலைக்களஞ்சியம் (Encyclopaedia)
ð  வேத விளக்கவுரை(Bible Commentary)
ð  வேத சொல் தொகுதி விளக்கப்பட்டியல் (Bible Concordance)
ð  வேத நில பட ஏடு(Bible Atlas)
ð  விளக்க வேதாகம கையேடு (Bible Study handbook)
ð  சொற்களஞ்சியம் (Lexicon)
ð  கலாச்சார சூழலை உணர்த்தும் நூல்கள், போன்றவை (Cultural contextualization tools etc. )

VII. தனிநபர் வேத ஆராய்ச்சியின் பயன்கள்
Ø  தனிநபர் வேத ஆராய்ச்சி தவறான விளக்கங்களைத் தவிர்க்க உதவுகிறது
Ø  நாம் வேதாகமத்திற்கு சரியான விளக்கம் கொடுக்கும்பொழுது, வேதாகமத்திற்கான விளக்கம் அளிப்பது/பெறுவது ஒரு தனிப்பட்ட அதிகாரமுடைய நபரை/சமூகத்தை(ரோமன் கத்தோலிக்க சபையின் சமூக கோட்பாடை போல) மாத்திரம் சார்ந்தது அல்ல என புரிந்துக்கொள்வோம். கத்தோலிக்க சபையினர்(Roman Catholic Church) சபையே வேதாகமத்தை உருவாக்கியதாகக் கூறினர், ஆனால் கிறிஸ்தவ சீர்திருத்த வாதிகளோ(Protestantism) வேதாகமே சபையை உருவாக்கக் கூடியது என்பதை பற்றிக் கொள்கின்றனர்.
Ø  தனிநபர் வேத ஆராய்ச்சி நாமாகவே வேதாகமத்தை புரிந்துக்கொண்டு, இயேசு கிறிஸ்துவுக்குள் முதிர்ச்சியடைய உதவுகிறது.
Ø  வேதவாக்கியங்களெல்லாம் தேவஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படி. அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துக்கொள்ளுதலுக்கும் சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பித்தலுக்கும் பயனுள்ளவைகளாயிருக்கிறது, எனப் புரிந்துக்கொள்வோம். 2தீமோத்தேயு 3:16, 17

தொகுப்பாய்வு வேத ஆராய்ச்சி முறைமை (INDUCTIVE BIBLE STUDY METHOD (IBS))
v  இந்த முறைமை அனைத்து முறைமைகளையும் ஏதாவதொரு வகையில் உள்ளடக்கியுள்ளது.
v  இது, பொதுவாக கவினிக்க படாத காரியங்களைக் கவனித்து, வேதாகமத்தை ஆழமாகப் படிப்பதற்கு ஒரு விரிவான, வியத்தகு முறைமையாகும்.
v  வேதாகமத்தின் மதிப்பீடுகள் அதினுடைய மூல சாரம் குறையாது பொருளறிவதற்கும், நம்முடைய சொந்த சிந்தனையை/பாரம்பரிய நம்பிக்கைகளை வேதாகமத்தோடு கூட்டாமலோ, குறைக்காமலோ இருப்பதற்கும் இது விரிவான, வியத்தகு முறைமையாகும்.
v  இது காரணத்துவமிக்க, செயல்படுவதற்கு ஏற்ற, தேவனுக்கு பிரியமான தீர்மானத்தையும் செயல்முறைகளையும் தெரிந்துக் கொள்ள உதவும் விரிவான, வியத்தகு முறைமையாகும்.
v  இதில் கவினித்தல், விளக்கமறிதல், கடைப்பிடித்தல் எனக் கற்றலுக்கு தேவையான அனைத்து அத்தியாவசிய, போதுமான காரியங்களும் உள்ளது.
ஆதரவாகவும் எதிராகவும் உள்ள பண்புக் கூறுகள் (Pro’s and Con’s)
·         இது ஒரு சிறந்த முறையாகும், எனினும் தொடக்க நாட்களில் அதிக நேரம் செலவழிக்க வேண்டியிருப்பதால் பலர் இதைக் கடைப்பிடிப்பதில்லை. ஆனால் ஒழுங்காகப் பழகிய ஒரு சில நாட்களில் நாம் படிக்கும் வேத பகுதி முழுமையாகவும், முக்கியத்துவமாகவும் இருப்பதற்கு இதில் உள்ள செயல்முறைகளும், கருத்துகளும் நம்முடைய சிந்தனையிலும், மனதிலும் பதிந்துவிடுகிறது.
·         வேதவாக்கியங்களை மிக ஆழமாக படித்துப் புரிந்துக்கொள்வதற்கு சிறந்த மதிப்பீடுகளைக் கொண்டது இந்த முறையாகும்.
·         அநேக குறைகளும் நிறைகளும் இருப்பினும், இது மிக சிறந்த முறைமையாகும். உபயோகிக்கபடாமல் இருக்குமாயின், ஒரு பயனும் இல்லை. நம்முடைய சார்ந்திருத்தலை நாம் பரிசுத்த ஆவியானவருக்கு அளிக்க வேண்டுமேயாயின் இந்த முறைமைக்கல்ல. பரிசுத்த ஆவியானவரே நம்முடைய எல்லா பலவீனங்கள் நிமித்தமும் நமக்குத் தெளிவாக வேத வசனத்தை உணர்த்த முடியும்.
I. கவனித்தறிதல் (OBSERVATION)
v  கவனித்தறிதல் என்பது ஒரு வசனம்/பகுதி/புத்தகத்திலுள்ளவற்றை தவறவிடாமல் இருக்க வார்த்தை வார்த்தையாய் மிக கவனமாகக் காண்பதாகும்.
v  ஏற்கனவே தெரிந்த, இருக்கின்ற, சாத்தியமான காரியங்களைக் கொண்டு நமது கண்களை அதிகம் பயன்படுத்தி காண்பதாகும்.
v  எல்லா காரியங்களிலும், முதலில் கவனிப்பது இருப்பது போல வேத ஆராய்ச்சியிலும் கவனித்தறிவது முதல் படியாகும். கவனித்தறிதல் தவறாக இருப்பின், கருத்தறிதல் தவறாகப் போகலாம் மற்றும் கடைப்பிடித்தலை நாம் தவறாக எடுத்துக்கொள்வதற்கான வாய்ப்புகள் அதிகம்.

கவனித்தறியும்பொழுது எடுத்துக்கொள்ளபடவேண்டியவை
இலக்கிய வடிவம்: (Literary form)
a.      கதை  வடிவம்(Narrative)- எல்லா வரலாற்று புத்தகங்களும்/பகுதிகளும்
  1. கவிதை வடிவம்(Poetry)- கவிதை புத்தகங்கள் மற்றும் மற்ற புத்தகத்தில் உள்ள கவிதை பகுதிகள்.
  2. சொல்லாடு (Discourse)
போதனை/சித்தாந்தம் (Teaching/ Doctrine)- இயேசு, தீர்க்கதரிசிகள், அபோஸ்தலர்களுடைய போதனைகள் மற்றும் உபதேசங்கள்
கடிதங்கள் (Epistles)- அபோஸ்தலர்கள் எழுதிய கடிதங்கள், மற்ற புத்தகத்தில் உள்ள கவிதைகள்
d.      தீர்க்கதரிசனம்(Prophecy)- தீர்க்கதரிசன புத்தகங்கள் மற்றும் தீர்க்கதரிசனம் உள்ள பகுதிகள்.
வெளிப்பாடுகள்(Apocalyptic)- தேவனுடைய அருளால் நிகழ் காலத்திலேயே, வருங்காலத்தில் நிகழ்வதை காண்பது போல ஆக்கியோன் எழுதுவது.
திரும்பத் திரும்ப வரும் வார்த்தைகள்/சொற்றொடர்கள்: (Repeated Words and Phrases)
ஒரு பகுதியிலோ/அதிகாரத்திலோ/புத்தகத்திலோ திரும்பத் திரும்ப வரும் சொற்கள் முக்கியமானதாக இருக்கும். சங்கீதம் 150அதி. (துதியுங்கள்)
இடத்தைக் குறிக்கும் வார்த்தைகள் (Location Words)
இடங்களைக் குறிக்கும் வார்த்தைகள் கலாச்சாரம், சூழ்நிலை மற்றும் வரலாற்று பின்னணியை புரிந்துக்கொள்ள உதவும். யோவான் 6;1 (திபேரியா), யோவான்  4:4 (சமாரியா)
நேரத்தைக் குறிக்கும் வார்த்தைகள்: (Time Words)
நேரம்/காலம்/வருஷத்தைக் குறிக்கும் வார்த்தைகள் சூழ்நிலை மற்றும் வரலாற்று பினணியை புரிந்துக்கொள்ள உதவும். லூக்கா 3:1(திபேரியுராயன் ராஜ்யம் பண்ணின பதினைந்தாம் வருஷத்திலே)
இலக்கணம்: (Grammar)
a.   காலங்கள்(Tense): சில பகுதியின் அர்த்தத்தைப் புரிந்துக்கொள்ள காலங்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். எபேசியர் 2அதி.
b.   நிபந்தனை உறுப்பு (Conditional Clauses): நிறைய வசனங்களில் ‘ஆல்/ ஆயின்‘ என்னும் நிபந்தனை உறுப்பு(பின்னொட்டில்- suffix) பயன்படுத்தப்பட்டுள்ளது, அது கவனிக்க பட வேண்டும். லூக்கா 19:8
c.   வினைசொற்கள்(Verbs): முக்கியமான வினைசொற்கள் கவனிக்கப்பட வேண்டும். லூக்கா             10:25-37(கண்டு)
d.   கேள்விகள்(Interrogation): அணியிலக்கண கேள்வி(Rhetorical question)- பதில்கள் சொல்லத் தேவை இல்லாத கேள்விகள். ஆதியாகமம் 18:14, மத்தேயு 27: 46
e.   இணைக்கும் வார்த்தைகள் (Connective Words): இரண்டு வாக்கியங்களுக்கு இடையில் பாலமாக அமைந்து, அதினுடைய அர்த்தத்தைப் பாதிக்கிற வார்த்தைகளைக் கவனிக்க வேண்டும். கலாத்தியர் 5:13
உருவகங்கள்: (Figures of Speech)
a.       உயர்வுநவிற்சி (Hyperbole): ஒரு காரியத்தை அழுத்திக் கூறுவதற்கு மிகைபடுத்திக் கூறுவது. சங்கீதம் 6:6
b.      உருவகம்(Metaphor): இரண்டு வேறுப்பட்ட காரியங்களை ஒப்பிடுவது. சங்கீதம் 94:22
c.       ஆகுபெயர்(Metonymy): ஒரு காரியத்தை அது தொடர்புடைய மற்ற காரியத்தின் மூலம் குறிப்பிடுவது. 2கொரிந்தியர் 3:15
d.      உவமை (Simile): இரண்டு வேறுப்பட்ட காரியங்களை ஒப்புமை சொல்லைக் கொண்டு ஒப்பிடுவது. யோபு 41:24
e.      மனிதபண்பேற்றுதல் (Anthropomorphism): கடவுளை மனித வடிவம் கொண்டு குறிப்பிடுவது. யாத்திராகமம் 33:23, சங்கீதம் 10:11
f.        வஞ்சப்புகழ்ச்சி அணி (Irony): சொல்ல வந்த காரியத்தின் அர்த்தத்தை எதிர்மறையாகக் கூறுவது. பழிப்பது போலப் புகழ்வது, புகழ்வது போலப் பழிப்பது. 2சாமுவேல் 6:20
g.       முன்னிலையணி(Apostrophe): ஒரு இடத்தில இல்லாத நபரை/பொருளை, அல்லது கற்பனையாக ஒரு நபரை/பொருளைக் குறிப்பிடுவது. யோசுவா 10:12
h.      ஆளுருவாக்குதல் (Personification): உயிரில்லாத அல்லது மனிதரில்லாதவற்றிற்கு மனித வடிவம் கொடுப்பது. சங்கீதம் 98: 7, 8
i.        உவமைக்கதை (Parable): ஒரு கருத்தை/காரியத்தை விளக்கப் பயன்படுத்தப்படும் சாத்தியமான கதை/ காரியமாகும். மத்தேயு 13அதி, லூக்கா 5:36-39
j.        தொடர் உருவகக்கதை (Allegory): ஒரு கருத்தை/காரியத்தை விளக்கப் பயன்படுத்தப்படும் கதை/ காரியமாகும். யோவான் 15:1-8
k.       மிகைப்பாட்டு மொழி (Pleonasm): ஒரு காரியத்தைக் குறிக்க வேண்டியதற்கு மிகுதியான சொற்களைப் பயன்படுத்துவது. 2சாமுவேல் 7:22
l.        சினையாகுபெயர்(Synecdoche): ஒரு பொதுவான காரியத்தைக் குறிக்க குறிப்பிட்ட காரியத்தைக் கூறுவது. சங்கீதம்: 7:16
m.    மங்கல வழக்கு(Euphemism): வன்மையாக உள்ள சொற்களை/ வெளிப்படையாகக் கூற முடியாதவற்றை எல்லோரும் ஒற்றுக்கொள்ள கூடிய வகையில் குறிப்பிடுவது. ரூத் 3:1-9, IIதீமோத்தேயு 2:16
முரண்பாடுகளும் ஒப்புமைகளும்: (Contrasts and comparisons)
a.       முரண்பாடு(Contrast): எதிர்மறையான அர்த்தங்களுள்ள வார்த்தைகள். 1யோவான் 3:10, மத்தேயு 7:13,14
b.      ஒப்புமை(Comparison): இரண்டு அல்லது மேற்ப்பட்ட காரியங்களை ஒப்புமைப்படுத்தி கூறுவது. எபேசியர் 2:1,2
தெரியாத வார்த்தைகள்: (Unknown Words)
அர்த்தம் சரியாகத் தெரியாத வார்த்தைகள், அது ஒருவருக்கொருவர் மாறும்.

மையக்கருத்து (Theme)
ஒரு வசனம்/பகுதியை விவரிக்கும் முக்கிய கருத்தாகும். உதாரணத்திற்கு 1கொரிந்தியர் 13அதிகாரம் அன்பை பற்றி விளக்குகிறது. ஒரு பகுதி/ அதிகாரத்தைத் துணை தலைப்புகளுக்குக் கீழேயும் பிரிக்க முடியும்.

7 உண்மை அறியும் கேள்விகள் (4எ கேள்விகள், 1யா கேள்வி, 2ஏ கேள்வி) (7 FFQ’s (5Wh questions, 1H question and 1SW question))

கேள்வி (QUESTION)
வசனம்/பகுதியில் உள்ள பதில் (ANSWER FROM VERSE/PASSAGE)
என்ன? (What?)
மையக்கருத்து
எங்கே? (Where?)
குறிப்பிடப்பட்டுள்ள இடங்கள்
எப்பொழுது? (When?)
குறிப்பிடப்பட்டுள்ள நேரம்
யார்? (Who?)
ஈடுப்பட்டுள்ள மக்கள் (நேரடியாக/மறைமுகமாக)
ஏன்? (Why?)
நோக்கம்/நடைபெற்றதின் காரணம்
எப்படி? (How?)
செயலாக்கங்கள்/முறைமை/நடந்த விதம்
ஏற்பட்டதென்ன? (So What?)
விளைவுகள்



விளக்கமறிதல்        (INTERPRETATION)
v  விளக்கமறிதலின் பொழுது நாம் கண்களை விடச் சிந்தனையை அதிகம் பயன்படுத்துகிறோம்.
v  உரையியல் என்பது விளக்கமறிதலுக்கு தொடர்பான சொல்/கல்வியாகும். உரையியல் என்பது இறையியல் மூல இலக்கியங்களை முறைப்படி அலசி உரை வரைதலாகும்.
v  நிறைய நேரங்களில் நாம் என்ன கூற வேண்டும் என நினைக்கின்றோமோ அதை வேதாகமத்திலிருந்து வருவித்து மற்றவருக்குச் சொல்லுகிறோம். ஆனால் வேதாகமத்தில் என்ன கூறப்பட்டுள்ளதோ, அதை அப்படியே பொருள் உணர்ந்துக்கொள்ள தொகுப்பாய்வு வேத ஆராய்ச்சி மிகவும் உதவுகிறது.
v  நாம் நமது ஆக்கும் திறனால் நிறைய யோசித்து ஒப்பிட்டாலும், வேதாகமத்தில் உள்ள அனைத்து வசனங்களுக்கும் ஒரு சரியான விளக்கம் மாத்திரமே இருக்க முடியும். எனவே நாம் ஆவியானவரின் உதவியை நாடுவது எப்பொழுதும் அவசியமாகும்.
v  விளக்கமறிதலின் வழுவாமை ∞(நேரடி விழுக்காடாக) கவனித்தறிதலுக்கு எடுக்கப்பட்ட முயற்சியாகும்.

விளக்கமறியும்பொழுது எடுத்துக்கொள்ளபடவேண்டியவை
1. அர்த்தங்களுக்கேற்ப விளக்கமறிய வேண்டும்: (Interpret according to the meaning)
ஒரே வார்த்தைக்கு வெவ்வேறு அர்த்தங்கள் உள்ளன, வெவ்வேறு வார்த்தைகள் ஒரே அர்த்தத்தைக் கொடுக்கின்றன, மற்றும் காலப்போக்கில் வார்த்தைகளின் அர்த்தமும் உருவமும் வசனங்களில் மாற்றம் அடைந்துள்ளன. எனவே அர்த்தத்தைக் கொண்டு ஒரு வசனத்தையோ பகுதியையோ விளக்கமறிய வேண்டும். ஒரு வார்த்தையின் மூல மொழியில் உள்ள அர்த்தத்தைச் சில நேரங்களில் அப்படியே பொழிபெயர்க்க முடியாது, அதற்கு நாம் சொற்களஞ்சியத்தை(Lexicon) பயன்படுத்தலாம்.  
2. இலக்கணத்திற்கேற்ப விளக்கமறிய வேண்டும்: (Interpret according to the Grammar)
ஒரு பகுதியில் உள்ள காலங்கள் (கலாத்தியர் 2:20), வினைசொற்கள் (ரோமர் 1:3-4), முன்வரும் உருபு (ரோமர் 3:21,22) மற்றும் தழுவுசொல் (மத்தேயு 2:1-11) வசனம்/வசனங்களின் அர்த்தத்தைப் பெரிதும் பாதிக்கும் எனவே அவற்றைச் சரியான முறையில் கையாள வேண்டும். இணைப்பு சொற்களும், நிபந்தனை சொற்றொடர்களும் ஒரு சிறந்த வழுவான கடைப்பிடித்தலை கண்டறிய உதவும்.
3. சூழ்நிலைக்கேற்ப விளக்கமறிய வேண்டும்: (Interpret according to the Context)
ஒரு வசனம்/பகுதி/அதிகாரம் அது இடம் பெற்றிருக்கும் இடத்திற்கு ஏற்ப உண்மையான விளக்கத்தை அறிந்துக்கொள்ள உதவும். யோவான் 1:1-15 (‘வார்த்தை’ என்பதன் அர்த்தம் அந்த சூழ்நிலையைக் கொண்டே விளக்கம் அறியப்பட வேண்டும்.
4. பின்னணிக்கேற்ப விளக்கமறிய வேண்டும்: (Interpret according to the Background)
வரலாற்று பின்னணி (மத்தேயு 2:1), புவியியற் பின்னணி (யோவான் 4: 3-5), கலாச்சார பின்னணி (லூக்கா 7:44-46), சமூக பின்னணி (மாற்கு 1:40-44, லேவியராகமம் 13:45, 46), சில பகுதியின் சரியான அர்த்தத்தைப் புரிந்துக்கொள்ள உதவும்.
5. நோக்கத்திற்கேற்ப விளக்கமறிய வேண்டும்: (Interpret according to the Purpose)
சர்ச்சைக்குரிய வேதாகம வசனங்களை மொழிபெயர்க்கும்பொழுது வேதாகமத்தின் முழு நோக்கம் நம் மனதில் இருக்க வேண்டும். (லூக்கா 14:26, யாத்திராகமம் 20:12, மத்தேயு 10:37)
ஆக்கியோன் ஒரு புத்தகத்தை எதற்கு எழுதினார், யாருக்கு எழுதினார் என்பதும் கூடச் சரியான விளக்கமறிதலுக்கு பெரிதும் உதவுகிறது. (யோவான் 20:31, 1யோவான் 5:13)


Summary of Interpretation
The Meaning of the Bible lies in its Grammar, Background, & Purpose in according to its Context





கடைப்பிடித்தல் (APPLICATION)
v  கடைப்பிடித்தலை அறிய நாம் கண்களையும் சிந்தனையையும் விட மனதை அதிக அளவில் பயன்படுத்துகிறோம்
v  நாம் ஒவ்வொருவரும் ஒரே வழிக்காட்டுதலை பயன்படுத்துவதால் கவனித்தறிதலும், விளக்கமறிதலும் பெரிதும் மாறுவதில்லை. ஆனால் வேத ஆராய்ச்சியில் மிக முக்கிய பங்காய் இருக்கிற கடைப்பிடித்தல் பகுதி ஒவ்வொருவரின் சூழ்நிலைக்கும் தேவைக்கும் ஏற்ப, ஆவியானவரின் வழிநடத்துதலின் பேரில் பெரிதும் மாறுபடும்.
v  எல்லா வசனமோ/பகுதியோ அனைவருக்கும் கடைப்பிடித்தலுக்கானக் காரியங்களை தருவதில்லை. ஆனால் ஒவ்வொரு வேத ஆராய்ச்சியிலும் நாம் நிறைய அறிவை பெற முடியும், அது மற்றவரை வழிநடத்துவதற்கு உதவும்.
கடைப்பிடித்தலுக்கான காரியங்களால் உண்டாகும் பயன்கள்:
நாம் கடைப்பிடித்தலில் கற்றுக்கொள்ளும் காரியங்கள் கீழே உள்ள ஏதாவது வகையில் நமக்குப் பயனுள்ளதாய் இருக்கும், இல்லையேல் நாம் கவனித்தறிதலையும், விளக்கமறிதலையும் சரி பார்க்க வேண்டும்.
  1. ஒவ்வொவொரு வேத ஆராய்ச்சியின் பிறகும் நாம் தேவனை விசுவாசித்து, அவர் கொடுத்த மதிப்பீடுகளில் ஸ்திரமாக நிற்க முடியும்.
  2. புதிய காரியங்களைக் கற்று அறிவிலும் ஞானத்திலும் வளர முடியும். நாம் பிணைந்துள்ள சமூக, கலாச்சார, கல்வி, மொழி முதலிய பின்னணிகளால் பெறப்பட்ட முன்குறிக்கப்பட்ட யோசனைகளைத் தகர்த்தெரிய முடியும்.
  3. நாம் தேவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்படிய முடியும். கட்டளைகள் நம்மைக் கட்டுப்படுத்துவதில்லை ஆனால் அவை மற்ற காரியங்களின் விளைவுகளைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது எனப் புரிந்துக்கொள்ள முடியும்.
  4. நாம் தேவனுடைய பிள்ளைகளாக அவர் கொடுத்திருக்கின்ற சத்தியங்களை சூழ்நிலைக்கேற்ப பற்றிக்கொள்ள முடியும்.
  5. மற்றவர்கள் தேவனுடைய வார்த்தையைக் கற்றுக்கொள்ள தூண்டுதலாய் இருந்து, அவர்களுக்கு மற்ற எந்த வழியிலோ விதத்திலோ கிடைக்காத மதிப்பீடுகளைப் போதிக்க முடியும்.

 Summary of Application

The Application of the Personal Bible Study helps us to B(believe)L(learn)O(obey)C(Claim)K (Kindle) (all the misleading’s in life personally).

 முடிவுரை: (CONCLUSION)                             
தொகுப்பாய்வு வேத ஆராய்ச்சி முறைமை வேத ஆராய்ச்சிக்கு ஒரு நேர்த்தியான முறையாகும், எனினும் நிறைய பேர் தங்களுடைய நேரத்தை அதற்காகப் பயன்படுத்துவதை கடினமாகக் கருதுகின்றனர். ஆனால் இந்த முறைமையில் வேதத்தை ஆழமாகப் படிப்பது ஆவிக்குரிய வளர்வுக்கு உதவும். நம்மால் முடிந்த வரையில் ஒழுங்காக(வாரத்திற்கு ஒருமுறை/இரண்டு வாரத்திற்கு ஒருமுறை/மாதத்திற்கு ஒருமுறை) பழகுவது பெரிய பயன் தரும்.
வேதாகமம் நமக்குத் தனிப்பட்ட முறையில் எழுதப்பட்டதல்ல, எனினும் நமது தனிப்பட்ட வாழ்விற்கான அனைத்து மதிப்பீடுகளையும் தரவல்லது. மற்றும் நிறைய காலங்களில் வாழ்ந்த நிறைய மக்களால், நிறைய நோக்கங்களுக்காய் எழுதப்பட்டுள்ளது, காலவரிசையாக அது அடுக்கி வைக்கப்படவில்லை. வேதாகமம் இரு புறமும் கருக்குள்ள பட்டயம், தொகுப்பாய்வு வேத ஆராய்ச்சி முறைமை வேதாகமத்தை சரியாகக் கையாள உதவும்.
நாம் குழு வேத ஆராய்ச்சியை மிகத் தெளிவாகவும், ஆழமாகவும் நடத்துவதற்கு தொகுப்பாய்வு வேத ஆராய்ச்சியைப் பயன்படுத்தலாம், அதில் பங்குப்பெறும்பொழுது மற்ற முறைமைகளில் எளிதான ஏதேனும் முறைமையைப் பயன்படுத்தலாம்.
ஒரு கிறிஸ்தவனாக நாம் ஒவ்வொரு நாளும் புதிய காரியங்களைக் கற்றுக்கொண்டு நம்முடைய திறன்களையும், நம்மையும் தகுதி படுத்திக்கொள்ள வேண்டும். அதற்கு அதிக உழைப்பும் கடின முயற்சியும் தேவை.
“நம்மைச் சுற்றி கடவுள் கொடுத்துள்ள வாய்ப்புகளைப் பயன்படுத்துவோம்”

References: 1. “Old Testament Made Easy” by Rev Dr. J. Godwin Nickelson; 2. “The Bible Study Handbook” by Lindsay Olesberg; 3. Let the Bible Speak by Shirley Christopher, Prema Fenn, Vijaya pramar


கதை வடிவம்/வரலாறு வடிவத்தில் உள்ள (NARRATIVE/HISTORICAL FORM) பகுதிகள்/வசனங்களைப் படிப்பதற்கான வழிகாட்டுதல்கள்:
Ø  கதை/வரலாற்று வடிவில் உள்ள பகுதிகளில் நடந்த சம்பவங்கள்/சூழ்நிலைகள் அப்படியே கூறப்பட்டிருக்கும். ஒரு கதை வடிவில் உள்ள பகுதி உருவகதொடர் அல்லது உவமை தொடரைப் போல மறைந்து இருந்து பொருள் தருவதில்லை. ஒரு கதை வடிவில் உள்ள கதாபாத்திரமோ/சம்பவமோ முந்தின/ பிந்தின கதாபாத்திரங்கள்/ சம்பவங்களோடு ஒப்பிடப்பட்டு கருத்துக்கள் அறியப்பட்டாலும், விடுபட்ட காரியங்களைச் சரியான சான்றாதாரம் இல்லாமல் விளக்கமறிவது சரியான விளக்கமறிதலாகாது.
Ø  கதை வடிவில் உள்ள பகுதியில் நேரம், இடம், மற்றும் காலங்கள் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஒரு பகுதி/வசனத்தில் ஈடுப்பட்டுள்ள கதாபாத்திரங்களும் அதற்கு வடிவம் கொடுக்கும்.
Ø  கதை வடிவில் உள்ள ஒரு பகுதியின் நிகழ்வு/சம்பவத்தின் அர்த்தம் அந்தச் சூழலில் உள்ள மக்களின் கலாச்சாரத்தைப் பொருத்து பகுத்தறியப்பட வேண்டும், நம்முடைய சுய கலாச்சாரத்தோடு ஒப்பிட்டு அறியப்படுவது மிகச் சரியானதாக இருக்காது.
Ø  வரலாறு/ கதை வடிவத்தில் உள்ள பகுதிகளில் சூழ்நிலை மிக முக்கியமானதாக இருக்கும். இணைந்திருக்கும் பகுதிகள் தனியாகப் பிரித்தெடுக்கப்பட்டு விளக்கம் அறியப்படவோ செயல்படுதலுக்கு எடுத்துக்கொள்ளப்படவோ கூடாது, ஏனெலில் அந்தச் சம்பவத்தின் முழுமையான சாரம் குறைந்துவிடும்.
Ø  ஒரு வரலாற்று/கதை வடிவில் உள்ள பகுதியில் ஒரு செயலைவிட அது நடைப்பெற்றதன் உள் நோக்கம் ஆராய்ந்து அறியப்பட வேண்டும். சில செயல்கள் நம் பார்வைக்கு நல்லதாக இருக்கும், சில செயல்கள் நம் பார்வைக்கு நல்லதாக இருக்காது. சில சம்பவங்கள் சாதாரண வாழ்வில் நடக்க கூடியதாக இருக்காது, ஆனால் சர்வ வல்லமையுள்ள தேவனால் கூடியதாகும்.
Ø  மனிதர்கள்(தீர்க்கதரிசிகள், இராஜாக்கள், தலைவர்கள் முதலியவர்கள்) அனைவரும் எல்லா நேரங்களிலும் நேர்த்தியானவர்களாய் இருந்ததில்லை, ஆதலால் வேதாகமத்தில் உள்ள போதனைகள் எதைப் பின்பற்ற வலியுறுத்துகிறதோ அதைப் பின்பற்ற வேண்டும், எது ஏற்றுக்கொள்ள கூடாத காரியங்களோ அதை பின்பற்றக் கூடாது.
வேதாகமத்தில் உள்ள மற்ற போதனைகள் வலியுறுத்தும் வரை, எந்தக் கோட்பாடோ/கருத்தோ ஒரு வரலாற்று/கதை வடிவுள்ள பகுதியிலிருந்து எடுத்துக்கொள்ளப்பட கூடாது.

உவமைத்தொடர்/ உருவகத்தொடரிருள்ள (PARABLES/ALLEGORIES) பகுதிகள்/வசனங்களைப் படிப்பதற்கான வழிகாட்டுதல்கள்:
Ø  உவமைத்தொடர்/ உருவகத்தொடர் கதை வடிவம்போல இருக்கும், ஆனால் அது மறைபொருள்களை கொண்டதாகும்.
Ø  உவமைத்தொடர் என்பது நடைமுறைக்குச் சாத்தியமான நிகழ்வு/ தருவாயாக இருக்கும், ஆனால் உருவகத்தொடர் என்பது நடைமுறைக்குச் சாத்தியமல்லாத நிகழ்வு/ தருவாயாக இருக்கும். எதுவாக இருந்தாலும் அந்தச் சம்பவம்/விளக்கம் முக்கியமானதில்லை ஆனால் அது வெளிபடுத்தும் மையக் கருத்தே முக்கியமானதாகும்.
Ø  பொதுவாக உவமைத்தொடர்/ உருவகத்தொடர் ஒரு மையக்கருத்தை/ உண்மையை வெளிப்படுத்தப் பயன்படுத்தும் உதாரணமாகும்.

போதனைகள்/ கடிதங்களில் உள்ள (TEACHINGS/ EPISTLES) பகுதிகள்/வசனங்களைப் படிப்பதற்கான வழிகாட்டுதல்கள்:
Ø  போதனைகளில் உள்ள பகுதிகள் மைய கருத்தை/ கருத்துக்களை சுற்றி அமைந்திருக்கும்.
Ø  ஆக்கியோனின் உள் கருத்து, நோக்கம், அதைப் பெற்றுக்கொள்கிறவர்கள் போன்றவை ஒரு போதனை/ கடிதத்தில் உள்ள பகுதிகள்/ வசனங்களைப் படிக்கும் பொழுது முக்கியமாகக் கருதப்பட வேண்டியவை.
Ø  எடுத்துக்காட்டுகளும்/ உதாரணங்களும் அந்தச் சூழ்நிலை மற்றும் அது இடம்பெற்றுள்ள வசனங்களைப் பொருத்து விளக்கம் அறியப்பட வேண்டும்.
Ø  கீழ்ப்படிய வேண்டிய கட்டளைகள், பின்பற்ற வேண்டிய போதனைகள், ஆகியவற்றில் எச்சரிப்புகள் அடங்கி இருக்கும்.
Ø  நிபந்த்தனையுள்ள ஆசிர்வாதங்களும் அதிகம் இருக்கும்.
கவிதை வடிவில் உள்ள (POETIC FORM) பகுதிகள்/வசனங்களைப் படிப்பதற்கான வழிகாட்டுதல்கள்:
Ø  கவிதை வசனங்கள் கவிதை புஸ்தகங்களில் மாத்திரம் இடம் பெறவில்லை, அவை பெரும்பாலான வேத புஸ்தகங்களில் இடம் பெற்றுள்ளன. ஒரு சில புஸ்தகங்களை(லேவியராகமம், எஸ்தர், போன்றவை) தவிர்த்து 1/3 பழைய ஏற்பாடு பகுதிகள் கவிதை வசனங்கள் உடையவையாகும்.
Ø 



 சங்கீதம், நீதிமொழிகள், யோபு, தீர்க்கதரிசன புஸ்தகங்கள் ஆகியவற்றில் முழுவதுமாகவோ அல்லது பெரும்பாலான பகுதிகளோ கவிதை வடிவில் உள்ள வசனங்களைக் கொண்டிருக்க்கிறது. யூதர்கள் இசையை விரும்புகிறவர்கள், தங்கள் பாடல்களுக்குப் பெயர்ப் பெற்றவர்கள். மிகப் பெரிய புஸ்தகமான சங்கீதம் பல ஆக்கியோன்களால் (இராஜாக்கள், லேவியர்கள், தீர்க்கதரிசிகள், இசைக்கலைஞர்கள் முதலியவர்கள்) எழுதப்பட்டது, அதில் தாவீது பெரும்பாலான அதிகாரங்களை எழுதியுள்ளார்.     
Ø  கவிதை வடிவில் உள்ள சில வசனங்களை ஈரடிகளாகப் படிக்க வேண்டும். இணைப்பு வார்த்தைகள் இரு வாக்கியத்திற்கு இடையில் உள்ள தொடர்பை அறிய உதவும். மற்றும் உருவகங்களை கண்டறிந்து ஆராய்ந்து விளக்கமறிய வேண்டும்.
Ø  ஒரு கவிதையில் பயன்படுத்தப்பட்டுள்ள வன்மையான அல்லது கடுமையான மொழியைக் கண்டறியுங்கள். அந்த வார்த்தைகள் கடவுளுக்கு விரோதமானவர்களை கண்ட எழுதியவரின் உணர்வுகளாக இருக்கலாம், அது அவர்களுடைய சொந்த சிந்தனையாக இருக்க வேண்டியதில்லை. எனவே அதை அப்படியே உள்ளபடி எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை
Ø  மற்ற இலக்கிய நடைகளை ஒப்பிடும்பொழுது, கவிதை நடையில் உள்ள வசனங்கள் எளிதாக மனதில் வைத்துக்கொள்ளக் கூடியவை. அவை எளிதாகக் கற்று, நினைவில் வைத்து, ஆழ்ந்து சிந்திக்க தூண்டுதலாய் அமைக்கப்பட்டவை.
Ø  ஒரு கவிதை புஸ்தகத்தின் ஆக்கியோன் / எழுத்தாளர் பெரும்பாலும், தமக்கும் தேவன், மக்கள் அல்லது மற்ற (உயிருள்ள அல்லது உயிரில்லாத) காரியங்களுக்கும்  இருக்கும் தொடர்பை வெளிப்படுத்தும் ஆராதனையாளராகவோ தத்துவ ஞானியாகவோ இருக்கலாம்.


தீர்க்கதரிசன பகுதிகள்/வசனங்களை (PROPHETIC PASSAGES/VERSES) படிப்பதற்கான வழிகாட்டுதல்கள்:
Ø  தேவனிடமிருந்து வரும் எந்த நேரடியான வெளிப்பாட்டையும் தீர்க்கதரிசனம் எனலாம். எனவே வேதாகமம் அனைத்தையும் தீர்க்கதரிசனம் எனலாம், புஸ்தகங்களை எழுதிய ஆக்கியோன்களை தீர்க்கதரிசிகள் எனலாம். (‘நபி’ என்ற எபிரேய வார்த்தைக்குப் பொருள் ‘அழைக்கப்பட்டவர்’, ‘சீர்’ என்ற வார்த்தை ‘பார்ப்பவர்’ எனப் பொருள்படும்.
Ø  தீர்க்கதரிசனம் முன்னரிவிப்பது அல்லது கணிப்பது என்றே பெரிதும் புரிந்துக்கொள்ளப்படுகிறது. ஆனால் புதிய ஏற்பாடு நேரடியான காரியங்களை (சரியான வார்த்தையைச் சரியான நேரத்தில், பயமும் வழிவிலகலும் இல்லாமல் பேசுவதும்) கூறுவதும் தீர்க்கதரிசனம் என்கிறது.
Ø  மக்களுடைய தவறான தன்மைகளாலும், கடவுளுடைய பேச்சாளர் என்கிற அதிகாரத்தினாலும், தீரக்கதரிசிகளுடைய வார்த்தைகள் பயமில்லாததாயும், உயிரோட்டமுடையதாகவும் இருக்கும்.
Ø  புதிய ஏற்பாடு பழைய ஏற்பாட்டின் சில தீர்க்கதரிசனத்தை எவ்வாறு விளக்குகிறது என்பதை பார்ப்பது அவசியமாகும்.
Ø  தீர்க்கதரிசன வசனங்களில் உள்ள தகவல்கள் பெரும்பாலும் அதற்கு மிக அருகிய காலக்கட்டத்தில் நிறைவடைந்து இருக்கும், ஆதலால் வருங்காலத்தில் நிறைவேறும் என்கிற கண்ணோட்டம் எப்பொழுதும் இருக்க வேண்டியதில்லை.
Ø  நேரடியான அர்த்தத்தையும் நிறைவேறுதலையும் எடுத்துக் கொள்ளுங்கள். அது சாத்தியமில்லை என்றால், மறைமுக பொருளுக்குச் செல்லலாம். தீர்க்கதரிசன பகுதிகளின் தன்மைகளைக் கவனத்தில் கொள்ளுங்கள்.  
Ø  தீர்க்கதரிசிகள் வரலாற்றில் குறிப்பிட்ட நேரத்திலும், இடங்களிலும் பேசினார்கள். நிறைய சூழ்நிலைகள் ஊழலாகவும், ஒழுக்க கேடாகவும்,  மத பாசாங்காகவும், பொருளாதார ஏற்றதாழ்வுகளாகவும் இருந்தன. ஆதலால் தீர்க்கதரிசன பகுதிகளைப் புரிந்துக்கொண்டு விளக்கமறிய வரலாற்று, சமூக மற்றும் அரசியல் பின்னணிகளை தெரிந்துக் கொள்வது அவசியமாகும். (இராஜாக்களும், நாளாகம புஸ்தகங்களும், 17 தீர்க்கதரிசன புஸ்தகங்களின் நிறைய பின்னணி காரியங்களை அறிய உதவும்)
Ø  தொடக்கத்தில் ஒரு சிறிய புஸ்தகத்தை தேர்ந்தெடுத்து படிப்பது சிறந்ததாகும். முழு வேதாகமத்தையும் சரியான இடைவெளியில் ஆராய்ந்து நோக்குவது (SCANNING), வாசிப்பது, திரும்பத் திரும்ப வாசிப்பது, பகுதிகளுக்கு இடையில் உள்ள இணைப்பைக் கண்டறிவது, தீர்க்கதரிசன புஸ்தகங்களை சரியான முறையில் புரிந்துக்கொள்ள உதவும்.




குறிப்பு:

உள்ளடக்கம், மாதிரி மற்றும் டெம்ப்ளேட் கோப்புகளை அணுகவும் https://drive.google.com/drive/folders/1ATru1hDkvAOv_mhoKakeRorGBCvrblEs?usp=drive_link 

No comments:

Post a Comment